ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 541 பேர் கைது
ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 541 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்,
ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் என போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதற்காக காலை 10 மணிக்கு முன்பே அவர்கள் அங்கு குவிய தொடங்கினர்.
போராட்டம் தொடங்கியதை அடுத்து பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பேசினர். அவர்கள் அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தங்களின் பிரதான கோரிக்கையை வலியுறுத்தினர். அவர்கள் பேசும்போது மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். தங்களை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.
இந்த போராட்டத்தை ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், முபாரக்அலி, சுகந்தி, மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காட்சி அளித்தது. எங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தலைகளே தென்பட்டன. இதே போல அவர்கள் வந்திருந்த வாகனங்களும் சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தன.
அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு செல்லாததால் அலுவலகங்கள் வெறிச்சோடின. குறிப்பாக பரபரப்பாக காணப்படும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களும் களை இழந்து காணப்பட்டன. தொடர்ந்து நடைபெறும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசின் சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
காலாண்டு தேர்வு நடைபெறும் சமயத்தில் பள்ளிகளுக்கு பெரும்பாலான ஆசிரியர்கள் செல்லாததால் கற்றல், கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, மாணவர்கள் தங்களை முழுமையாக தேர்வுக்கு தயார் செய்ய முடியாத சூழல் நீடிக்கிறது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து விடிய, விடிய நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் செய்து வந்தனர். இந்த நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாலையில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 170 பெண்கள் உள்பட 541 பேர் கைதானார்கள். ஆயிரத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில் பங்கெடுத்தபோதிலும், பலரும் கைதாகாமல் வீடுகளுக்கு சென்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் மகாலில் தங்கவைக்கப்பட்டனர். சில மணி நேரங்களில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஜாக்டோ–ஜியோ சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய காத்திருப்பு போராட்டத்தில் பெண் ஊழியர்கள், அதிகாரிகள், ஆசிரிய, ஆசிரியைகள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அவர்கள் மதிய வேளையில் சாப்பிட அங்கேயே உணவு தயாரானது. முதல் நாளான நேற்று மதியம் சாம்பார் சாதம் பரிமாற முடிவு செய்யப்பட்டு, இதற்கான பணிகள் மும்முரமாக நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலரும் காய்கறிகள் நறுக்கி சமையலுக்கு உதவி செய்தனர். பிறகு, கமகமக்கும் மணத்துடன் தயாரான சாம்பார் சாதம் மதிய வேளையில் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. பெரும்பாலானோர் இதை சாப்பிட்டனர். சிலர் ஏற்கனவே, தாங்கள் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டனர்.
காத்திருப்பு போராட்டத்தில் பேசிய நிர்வாகிகள் கோரிக்கைகளை விவரித்தனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதால், சிலர் நகைச்சுவை நயத்துடன் கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதுமட்டுமின்றி கவிதை வாசிக்கவும், பாடல் பாடவும் சிலர் முன்வந்தனர். போராட்டக்காரர்களும், பாதுகாப்புக்கு வந்த போலீசாரும் இதை ரசித்து கேட்டனர். இதனால் போராட்டக்களம் ஒருவித கொண்டாட்டத்துடனே காணப்பட்டது.