டிராக்டரை ஜப்தி செய்ததால் தற்கொலை செய்த விவசாயி குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்


டிராக்டரை ஜப்தி செய்ததால் தற்கொலை செய்த விவசாயி குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Sept 2017 4:45 AM IST (Updated: 14 Sept 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே டிராக்டரை ஜப்தி செய்ததால் தற்கொலை செய்த விவசாயி குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் வெற்றி தலைமையில் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் மற்றும் அந்த சங்கத்தை சேர்ந்த 30–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா கணபதிபாளையம் அருகே மலையம்பாளையத்தை சேர்ந்த விவசாயி வெள்ளியங்கிரிநாதன் கடும் வறட்சி காரணமாக விவசாயம் செய்ய வழியின்றி மிகவும் சிரமமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தார். அவருக்கு உடல்நலம் குன்றிய மாற்றுத்திறனாளி மனைவியும், 10–ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் அவர் சேலத்தில் உள்ள கோடக் மகேந்திரா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் அரசு மானியத்துடன் கடன் பெற்று டிராக்டர் வாங்கி உழவுக்கு பயன்படுத்துவதுடன், விவசாயிகளுக்கு மானிய விலையில் வாடகைக்கு உழவு செய்து கொடுத்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டதால் உரிய நேரத்தில் வங்கி கடன் தவணையை அவர் செலுத்த முடியவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் போலீசாருடன் வந்து மிரட்டி அவருடைய டிராக்டரை ஜப்தி செய்து எடுத்து சென்று விட்டனர். இதை அறிந்த விவசாயி வெள்ளியங்கிரிநாதன் கடந்த 6–ந் தேதி பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை போலீசார் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ள அவருடைய குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் விவசாயி வெள்ளியங்கிரிநாதன் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயியை தற்கொலைக்கு தூண்டிய கோடக் மகேந்திரா வங்கி ரூ.20 லட்சத்தை நஷ்ட ஈடாக விவசாயியின் குடும்பத்துக்கு கொடுக்க அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

மனு கொடுக்க வெள்ளியங்கிரிநாதனின் மகனும் உடன் வந்து இருந்தார்.


Next Story