அடிப்படை வசதி கோரி வழக்கு: தனுஷ்கோடியை நேரில் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு நீதிபதிகள் முடிவு
அடிப்படை வசதி கோரி தொடரப்பட்ட வழக்கில், தனுஷ்கோடி பகுதியை நேரில் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் பழைய தனுஷ்கோடி, தாவுக்காடு, பாரடி கிராமங்களிலும், அங்குள்ள பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி ராமேசுவரம் உப்பூரை சேர்ந்த திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
“பழமையான, வரலாற்று சிறப்பு மிக்க இடம் தனுஷ்கோடி. தற்போது இந்த இடம் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தொழில் நிமித்தமாகவே அங்கு தற்காலிகமாக தங்கியுள்ளனர். பழைய தபால் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்டவை நினைவு சின்னங்களாக உள்ளன. கடல்சீற்றம் ஏற்படும் காலங்களில் ஆபத்தான பகுதியாக தனுஷ்கோடி உள்ளது. இதனால் தான் அந்த பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் உள்ளோம்“ என்று கூறினார்கள்.
இதை கேட்ட நீதிபதிகள், வருகிற ஞாயிற்றுக்கிழமை (17–ந்தேதி) தனுஷ்கோடிக்கு நேரில் வந்து ஆய்வு செய்கிறோம். மனுதாரர் வக்கீலும் உடன் வர வேண்டும். ஆய்வு முடிந்தபின்பு, இந்த வழக்கின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்போம் என்று கூறி விசாரணையை வருகிற 18–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.