தண்டவாள பராமரிப்பு பணியால் கும்மிடிப்பூண்டி ரெயில்கள் எண்ணூர் வரை இயக்கம் பயணிகள் அவதி
தண்டவாள பராமரிப்பு பணியால் கும்மிடிப்பூண்டி ரெயில்கள் எண்ணூர் வரை இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
பொன்னேரி,
பொன்னேரியை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தண்டவாள பராமரிப்பு பணி நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் தொடங்கியது. இந்த பணியை 2 மணி நேரத்தில் முடிக்க ஊழியர்கள் முடிவு செய்து இருந்தனர். ஆனால் நேற்று காலை 10 மணி வரை பராமரிப்பு பணி தொடர்ந்து நடந்தது. இதனால் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை இயக்க வேண்டிய மின்சார ரெயில்கள் எண்ணூர் வரை இயக்கப்பட்டன.
இதே போல் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு இயக்க வேண்டிய மின்சார ரெயில்கள் எண்ணூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டன. மின்சார ரெயில்கள் சரிவர இயக்கப்படாதது குறித்து ரெயில்வே ஊழியர்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பொன்னேரி ரெயில் நிலையத்தில் நேற்று காலை ஏராளமான பயணிகள் மின்சார ரெயிலுக்காக காத்திருந்தனர்.
மின்சார ரெயில் வராத நிலையில் டிக்கெட் கொடுத்தது குறித்து அங்கிருந்த ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளை ரெயில்வே ஊழியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பராமரிப்பு பணி காரணமாக சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பொன்னேரி ரெயில் நிலையத்தில் லக்னோ எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதே போல் சென்னையில் இருந்து புறப்பட்ட கோரமண்டல், கவுரா, ஜமுதாபி எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வழியில் நிறுத்தப்பட்டன.
தண்டவாள பராமரிப்பு பணி முடிந்ததும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.