தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டம்


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2017 9:30 PM GMT (Updated: 14 Sep 2017 6:53 PM GMT)

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று 2–வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று 2–வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ சார்பில் 8–வது ஊதியக்குழு மாற்றம் அறிவிக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று 8–வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன.

காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இந்த காத்திருப்பு போராட்டம் நேற்று 2–வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பவுல் ஆபிரகாம், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்க பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாவட்ட தலைவர் பிரான்சிஸ் ஹென்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2–வது நாள் போராட்டத்தை தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொதுச்செயலாளர் மயில் தொடங்கி வைத்து பேசினார். இந்த போராட்டத்தில், மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஜெயபால், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story