வேலைநிறுத்த போராட்டம்: அரசு ஊழியர்கள் 1,525 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்


வேலைநிறுத்த போராட்டம்: அரசு ஊழியர்கள் 1,525 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 15 Sept 2017 4:30 AM IST (Updated: 15 Sept 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் 1,525 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விருதுநகர்,

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் 6-வது நாளாக நேற்றும் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் 700 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 300 பேர் ஆசிரியைகள். மொத்த ஆசிரியர்களில் 6 சதவீத பேர் வேலைக்கு செல்லவில்லை.

அரசு ஊழியர்களில் 1800 பெண்கள் உள்பட 3300 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆண் ஊழியர்களைவிட பெண் ஊழியர்களே அதிக அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் உள்ள அரசு ஊழியர்களில் 20 சதவீதம் பேர் வேலைக்கு செல்லவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரம் பேர் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைக்கு செல்லவில்லை.

5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலைநிறுத்தம் செய்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2-வது நாளாக நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இப்போராட்டத்தில் 1200 பேர் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நடந்தது. நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளில், அரசுப் பணியாளர் எவரும் வேலை நிறுத்தத்திலோ அல்லது அதனைத் தூண்டும் நடவடிக்கைகளிலோ ஈடுபடக்கூடாது. அரசுப் பணியாளர் எவரும், அரசு அலுவலகத்தில் அல்லது அலுவலக வளாகத்தின் எந்தப்பகுதியிலும் அலுவலக நேரத்தின்போதும் மற்றும் விடுமுறை நாட்களிலும் ஊர்வலம் செல்வதோ, கூட்டம் நடத்துவதோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விருதுநகர் மாவட்டத்தில் இந்த விதிமுறைகளை மீறிய வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வணிகவரித்துறை, கூட்டுறவுத்துறை, உணவு பாதுகாப்புத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 1,525 அரசு ஊழியர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

Related Tags :
Next Story