தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு– 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்டு வள்ளியூர் கோர்ட்டு உத்தரவு
வெவ்வேறு வழக்குகளில் ஆஜராகாததால் தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து வள்ளியூர் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
வள்ளியூர்,
வெவ்வேறு வழக்குகளில் ஆஜராகாததால் தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து வள்ளியூர் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
கொலை மிரட்டல்நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் ஜெயசேகரன். இவரை கடந்த 2013–ம் ஆண்டு 3 பேர் வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு வள்ளியூர் சப்–கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை தொடர்பாக அப்போது கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஜெயச்சந்திரன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.
வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள காரியாண்டியை சேர்ந்த நிலவேம்பு என்பவருக்கு சொந்தமான பூக்கடை கடந்த 2012–ம் ஆண்டு எரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையும் வள்ளியூர் சப்–கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் அப்போது இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த லிங்கதிருமாறன் ஆஜராகவில்லை.
இதேபோன்று ஏர்வாடி பகுதியில் கடந்த 2014–ம் ஆண்டு நடந்த ஒரு கொலை முயற்சி தொடர்பான வழக்கு விசாரணை வள்ளியூர் சப்–கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு அப்போது ஏர்வாடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முத்துராஜ் ஆஜராகவில்லை.
பிடிவாரண்டுஇந்த மூன்று வழக்குகளையும் விசாரணை செய்த சப்–கோர்ட்டு நீதிபதி மாய கிருஷ்ணன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஜெயச்சந்திரன், லிங்க திருமாறன், முத்துராஜ் ஆகிய மூன்று பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். அவர்கள் மூன்று பேரையும் பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கனகராஜ்(நாங்குநேரி), குமார்(வள்ளியூர்) ஆகியோருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ஜெயச்சந்திரன் தற்போது கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திலும், முத்துராஜ் குளச்சல் போலீஸ் நிலையத்திலும் தற்போது இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். லிங்கதிருமாறன் பதவி உயர்வு பெற்று தூத்துக்குடியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார்.