மாவட்ட கலெக்டர் அலுவலகங்களின் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்


மாவட்ட கலெக்டர் அலுவலகங்களின் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2017 4:30 AM IST (Updated: 15 Sept 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக காத் திருப்பு போராட்டம் நடத்தினர்.

அரியலூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவது தொடர்பாக அரசு மவுனம் காத்து வருவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

2-வது நாளாக

அந்த வகையில் நேற்று 2-வது நாளாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் முன்பு மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மாநில அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் அரசு ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஆவந்தார் தலைமையில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் மாவட்டத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பெரம்பலூர் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சிலர் அரைநிர்வாணத் துடன் நாமம் இட்டு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அப்போது அவர்கள் தட்டு ஏந்தி, கோரிக்கைகளை பிச்சையாக தருமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூரிலும்...

அரியலூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அரசு ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பஞ்சாபிகேசன் தலைமையில் அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தினர்.


Related Tags :
Next Story