குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Sep 2017 11:00 PM GMT (Updated: 14 Sep 2017 8:35 PM GMT)

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தரகம்பட்டி,

கடவூர் ஒன்றியம், தேவர்மலை ஊராட்சி, அய்யம்பாளையத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் 30 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் 3 ஆழ்குழாய் கிணற்று நீர் வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தும், மின்மோட்டார்கள் பழுது ஏற்பட்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் பழுதடைந்த மின்மோட்டார்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறையினர் கழற்றி எடுத்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் அப்பகுதி பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக அப்பகுதி பொதுமக்களுக்கு காவிரி குடிநீரும் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். தற்போது அய்யம்பாளையம் பகுதியில் பரவலாக மழை பெய்து ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே மின் மோட்டார்களை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) அய்யம்பாளையத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி அய்யம்பாளை யம் அருகே உள்ள சீத்தப்பட்டியில் பாளையம்- திருச்சி சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்ததால் அவர்கள் பொதுமக்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இன்று (நேற்று) மாலைக்குள் ஆழ் குழாய் கிணறுகளில் மின்மோட்டார்கள் பொருத்தி குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக் கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பாளையம்- திருச்சி சாலையில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story