குழிகள் தோண்டி சாலையை சேதப்படுத்திய விநாயகர் மண்டல்களுக்கு ரூ.13 லட்சம் அபராதம் மாநகராட்சி நடவடிக்கை


குழிகள் தோண்டி சாலையை சேதப்படுத்திய விநாயகர் மண்டல்களுக்கு ரூ.13 லட்சம் அபராதம் மாநகராட்சி நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Sept 2017 4:09 AM IST (Updated: 15 Sept 2017 4:09 AM IST)
t-max-icont-min-icon

குழிகள் தோண்டி சாலையை சேதப்படுத்திய விநாயகர் மண்டல்களுக்கு மாநகராட்சி ரூ.13 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.

மும்பை,

குழிகள் தோண்டி சாலையை சேதப்படுத்திய விநாயகர் மண்டல்களுக்கு மாநகராட்சி ரூ.13 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.

சாலையில் குழிகள்

மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மண்டல்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 10 நாட்கள் வழிபாடுகள் நடந்தன. மண்டல்களில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி வரிசையில் நின்று விநாயகரை தரிசனம் செய்வதற்கு வசதியாக ஆங்காங்கே சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு கம்புகள் நடப்பட்டு இருந்தன. இதனால் சாலை சேதம் அடைந்ததோடு குண்டும், குழியுமாக காணப்பட்டது.

அபராதம்

இந்தநிலையில் குழிகள் தோண்டி சாலைகள் சேதமடைவதற்கு காரணமான மண்டல்களை கண்டறிந்து மாநகராட்சி அபராதம் விதித்து உள்ளது. இதில், பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா மண்டல் சார்பில் சாலைகளில் 243 குழிகள் தோண்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்காக அந்த மண்டலுக்கு மாநகராட்சி ரூ.4 லட்சத்து 86 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது.

இதேபோல கணேஷ் கல்லி மண்டலுக்கு ரூ.4 லட்சத்து 14 ஆயிரமும், காலசவுக்கி பாலகணேஷ் மண்டலுக்கு ரூ.32 ஆயிரமும், பரேல் ராஜா மண்டலுக்கு ரூ.42 ஆயிரமும், சிஞ்ச்பொக்லி ராஜா மண்டலுக்கு ரூ.68 ஆயிரமும் என பல்வேறு மண்டல்களுக்கு சாலைகளில் குழி தோண்டி சேதப்படுத்தியதற்காக மொத்தம் ரூ.12 லட்சத்து 94 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story