தூத்துக்குடி துறைமுகத்தில், மரத்தடி இடித்ததில் பலியான நெல்லை டிரைவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


தூத்துக்குடி துறைமுகத்தில், மரத்தடி இடித்ததில் பலியான நெல்லை டிரைவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2017 8:30 PM GMT (Updated: 2017-09-23T19:44:48+05:30)

தூத்துக்குடி துறைமுகத்தில் மரத்தடி இடித்ததில் பலியான நெல்லை டிரைவரின் உடலை வாங்க மறுத்து கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி துறைமுகத்தில் மரத்தடி இடித்ததில் பலியான நெல்லை டிரைவரின் உடலை வாங்க மறுத்து கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மரத்தடி இடித்து டிரைவர் பலி

நெல்லை மாவட்டம் மேட்டூர் மருதப்புரத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் செந்தில்குமார்(வயது 29). லாரி டிரைவரான இவர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து மரத்தடியை ஏற்றி தனியார் நிறுவனத்துக்கு கொண்டு செல்வதற்காக சென்றார். அங்கு கப்பலில் இருந்து கிரேன் மூலம் மரத்தடியை தூக்கி செந்தில்குமாரின் லாரியில் வைத்தனர்.

அப்போது மரத்தடியை லாரியுடன் கட்டுவதற்காக செந்தில்குமார் லாரி மீது ஏறி நின்று கொண்டு இருந்தாராம். கிரேன் மூலம் தூக்கி வரப்பட்ட மரத்தடி எதிர்பாராத விதமாக செந்தில்குமார் மீது வேகமாக இடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமாரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

உடலை வாங்க மறுத்து போராட்டம்

இந்த சம்பவம் குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், விபத்தில் பலியான டிரைவர் செந்தில்குமாரின் குடும்பத்தினருக்கு அவர் வேலை செய்து வந்த தனியார் ஏற்றுமதி நிறுவனத்தினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி செந்தில்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், சக தொழிலாளர்கள் செந்தில்குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து அந்த தனியார் நிறுவன அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் செந்தில்குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உறுதியளிக்கப்பட்டதன் பேரில், செந்தில்குமாரின் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story