சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் பிணத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்

மாணவியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கூடலூர் அருகே நடுரோட்டில் பிணத்துடன் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா கீழ்நாடுகாணி பகுதி தமிழக– கேரள எல்லையில் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகள் ரம்யா (வயது 17) கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். அவர் கடந்த 21–ந் தேதி காலாண்டு தேர்வு எழுதி விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். அதன் பின்னர் அவரை காணவில்லை.
இதுகுறித்து, மாணவியின் தந்தை தேவாலா போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் கீழ்நாடுகாணியில் உள்ள தனியார் தோட்டத்தில் ரம்யா பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த தேவாலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாணவியின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மாணவி ரம்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் மாணவி ரம்யாவை சிலர் கொலை செய்துள்ளனர் என்று அவரது தந்தை சுந்தரமூர்த்தி மற்றும் உறவினர் கள் தெரிவித்தனர். இதற்கிடையே போலீசார் சந்தேகத்தின்பேரில் அதேப்பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் அவரும், ரம்யாவும் காதலித்ததாகவும், அதற்கு ரம்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் விஷம் குடித்ததில், ரம்யா இறந்துவிட்டதாகவும் ராஜ்குமார் தெரிவித்தார். இதையடுத்து ராஜ்குமார் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மாணவி ரம்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று ரம்யாவின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. அப்போது ரம்யாவின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை 10 மணிக்கு ரம்யாவின் பிணத்துடன் கூடலூர்–கேரள சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தாசில்தார் சிவக்குமார், தேவாலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவி ரம்யா சாவுக்கு காரணமான 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் கஞ்சா புழக்கம் மற்றும் விற்பனை அதிகமாக இருப்பதால், கஞ்சா கும்பலால் தான் மாணவி கொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே நடவடிக்கை எடுக்கும் வரை மறியல் போராட்டத்தை கைவிட போவது இல்லை என்று கூறினர். இதனால் பரபரப்பு நிலவியது.
மாணவி ரம்யா சாவுக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் மறியலை கைவிட்டு மாணவியின் உடலை பிற்பகல் 12.30 மணிக்கு அங்கிருந்து எடுத்துச்சென்றனர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக தமிழக– கேரளா மற்றும் கர்நாடகா இடையே 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ராஜ்குமார் சிகிச்சை பெற்று வரும் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு, ஊட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, செந்தில்குமார் ராஜவேல் நேற்று சென்றார். பின்னர் அவர் ராஜ்குமாரிடம் வாக்குமூலம் பெற்று அதை பதிவு செய்தார்.