எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி துணை சபாநாயகர் தம்பிதுரை தொடங்கி வைத்தார்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி துணை சபாநாயகர் தம்பிதுரை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-24T02:40:39+05:30)

கிருஷ்ணகிரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை துணை சபாநாயகர் தம்பிதுரை தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று காலை எம்.ஜி.ஆரின் புகைப்பட கண்காட்சி கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ரிப்பன் வெட்டியும், எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை வெளியிட்டும் தொடங்கி வைத்தார்.

இந்த புகைப்பட கண்காட்சியில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் மற்றும் அ.தி.மு.க.வினர், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி அதே கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைத்து பொதுத் தேர்வுகளையும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதற்காக மாணவ, மாணவிகளுக்கு 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன.

மேலும் சிவில் சர்வீஸ் தேர்வை மாணவ, மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் 32 மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட மைய நூலகங்களில் பயிற்சிகள் வழங்கப்படும். மாணவ, மாணவிகள் இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மாணவர்களிடம் 10 சதவீதம் கற்றல் குறைபாடுகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து 100-க்கு 100 சதவீத தேர்ச்சியை கொண்டு வரப்படும்.

நடப்பாண்டில் மாணவ, மாணவிகளுக்கு 3 சீருடைகள் வழங்கப்படும். தமிழகத்தில் ரூ.437 கோடி செலவில் அரசு பள்ளிகளின் வகுப்புகள் கணினி மயமாக்கப்படும். தமிழக அரசு வழங்கும் மடிக்கணினிகளை கொண்டு நல்ல விஷயங்களை மாணவர்கள் கற்று அனைத்து தேர்வுகளிலும் தமிழ்நாட்டு மாணவர்களை மிஞ்ச முடியாது என்ற நிலையை மாணவர்கள் அடைய வேண்டும். மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல. முயற்சி நின்றாலும் மரணமே என்பதை உணர்ந்து மாணவ, மாணவிகள் படிக்க வேண்டும்.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

இதைத்தொடர்ந்து கல்வியில் சிறந்த வல்லுனர்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. முன்னதாக நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மலர்கள் மற்றும் காய்கறிகளால் ஆன கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. 

Related Tags :
Next Story