தனியார் மருத்துவமனையில் நடந்தது குமாரசாமிக்கு இதய அறுவை சிகிச்சை


தனியார் மருத்துவமனையில் நடந்தது குமாரசாமிக்கு இதய அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 23 Sep 2017 10:08 PM GMT (Updated: 2017-09-24T03:38:38+05:30)

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமிக்கு நேற்று பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

பெங்களூரு,

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமிக்கு நேற்று பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இதையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜை செய்து தேவேகவுடா வழிபட்டார்.

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவராக இருந்து வருபவர் குமாரசாமி. இவர், கடந்த 2007–ம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது அவருக்கு உடலில் ஒரு வால்வு வைக்கப்பட்டது. அந்த வால்வின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். தற்போது அந்த வால்வின் ஆயுட்காலம் முடிந்து விட்டதால், இருமல் காரணமாக குமாரசாமி அவதிப்பட்டார். இதனால் இதய அறுவை சிகிச்சை செய்து, அந்த வால்வை வெளியே எடுக்க குமாரசாமி முடிவு செய்தார். இதற்காக அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு குமாரசாமிக்கு நேற்று இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த டாக்டர்கள் குழுவினர், குமாரசாமியின் உடலில் இருந்த வால்வையும் அகற்றினார்கள். அவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு குமாரசாமி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் குறைந்தது 15 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி குமாரசாமிக்கு டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

இதற்கிடையில், குமாரசாமிக்கு நேற்று இதய அறுவை சிகிச்சை நடந்ததால், அது வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்றும், அவர் பூரண குணமடைய வேண்டும் என்பதற்காகவும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா பெங்களூரு என்.ஆர்.காலனியில் உள்ள ஆஞ்சனேய சாமி கோவில் மற்றும் அம்மன் கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

அதுபோல, குமாரசாமிக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்க வேண்டும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பிரமுகர்கள், தொண்டர்கள் நேற்று மாநிலம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்கள்.


Next Story