பேரறிவாளனுக்கு மேலும் 1 மாதம் பரோல் வழங்கிய அரசுக்கு நன்றி தாயார் அற்புதம்மாள் பேட்டி


பேரறிவாளனுக்கு மேலும் 1 மாதம் பரோல் வழங்கிய அரசுக்கு நன்றி தாயார் அற்புதம்மாள் பேட்டி
x
தினத்தந்தி 23 Sep 2017 11:51 PM GMT (Updated: 2017-09-24T05:21:03+05:30)

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.

ஜோலார்பேட்டை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 26 ஆண்டுகளுக்கு பிறகு 1 மாதம் பரோலில் வந்துள்ள பேரறிவாளன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது தாயார் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் அவரது தந்தை குயில்தாசனுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் மகன் பேரறிவாளனுக்கு மேலும் 1 மாதம் பரோலை நீட்டிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை மனு அளித்திருந்தார். இந்த நிலையில் பேரறிவாளனின் பரோலை மேலும் 1 மாதம் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தாயார் அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:–

எனது (அற்புதம்மாள்) கணவர் குயில்தாசனுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தனர். அறுவை சிகிச்சையின்போது மகன் பேரறிவாளன் உடனிருந்தால் அவருக்கு ஆறுதலாக இருக்கும் என்பதால், மகனின் பரோலை மேலும் 1 மாதம் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தேன்.

இதனை ஏற்று தமிழக முதல்–அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டு மேலும் 1 மாதம் பரோல் வழங்கியதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் பேரறிவாளன் பரோலுக்கும், விடுதலைக்கும் குரல் கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தன்னார்வ அமைப்பினர்கள், சமூக ஆர்வலர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story