வாணியம்பாடி பகுதியில் காவிரி குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம்


வாணியம்பாடி பகுதியில் காவிரி குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 23 Sep 2017 11:53 PM GMT (Updated: 23 Sep 2017 11:53 PM GMT)

வாணியம்பாடி–ஆலங்காயம் இடையே காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் 10–க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாணியம்பாடி,

வாணியம்பாடி–ஆலங்காயம் இடையே காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் 10–க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நீரை அருந்தும் பலர் நோய்களால் அவதிப்பட்டு மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சி, 5 பேரூராட்சி மற்றும் 944 ஊரக பகுதிகள் பயன்பெறும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வறண்ட மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். ஆனால் இதனை பராமரிக்க வேண்டிய அதிகாரிகள் குடிநீர் திட்ட செயல்பாடுகளை முறையாக கவனிக்காமல் உள்ளனர்.

வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் பேரூராட்சிக்கு செல்லும் வழியில் 10–க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக லாலாஏரி, கொத்தக்கோட்டை, சுண்ணாம்பு பள்ளம், ராஜபாளையம் கூட்ரோடு, நேதாஜி நகர், வாணியம்பாடி நியூ டவுன் மின்வாரிய அலுவலக பகுதிகளில் குடிநீர் வினியோகிக்கப்படும் கேட்வால்வு உள்ள இடங்களின் அருகில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இடங்களில் காவிரி குடிநீர் வீணாகி வருகிறது. அங்கு பொதுமக்கள் பலர் குளிக்கின்றனர். மேலும் பலர் துணிகளை துவைக்கவும் வாகனங்களை சுத்தம் செய்தும் வருகின்றனர்.

அசுத்தமாகும் அந்த தண்ணீர் மீண்டும் குழாய்களுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழாய்கள் உடைந்து பல நாட்களான நிலையில் அதனை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல் பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டியும் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளன. வாணியம்பாடி வேப்பமர சாலை, நிம்மியம்பட்டு, நேதாஜிநகர் வடக்கு, தெற்கு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டு பல மாதங்களாகி விட்டன. தூய்மை இந்தியா திட்டத்தில் சுகாதாரம் குறித்து அறிவுறுத்தும் அதிகாரிகள் பாசிகள் படர்ந்த இந்த குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் வினியோகிக்கப்படும்போது பாசிகளுடன்தான் தண்ணீர் வருகிறது.

இதனால் நோய்களும் பரவி வருகிறது. பல்வேறு நோய்களுக்கு குடிநீர் அசுத்தம்தான் முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகிக்கும் ஊர்களில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கும், ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் சென்ற வண்ணம் உள்ளனர்.

கடந்த மாதம் வரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 1500 பேர் சிகிச்சைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலரை கேட்டபோது ‘‘டாக்டர்கள் மருந்து, மாத்திரைகளை வழங்கி சிகிச்சை அளித்தாலும் சுகாதாரமான குடிநீரை குடிக்க அறிவுறுத்துகின்றனர். ஆனால் இதுபோன்று குழாய்கள் உடைந்த இடம் வழியாக கழிவுநீரும் சேர்ந்து வரும் தண்ணீரைத்தான் பயன்படுத்த வேண்டி உள்ளது.

எனவே அதிகாரிகள் இனியாவது குடிநீர் குழாய் உடைந்த இடங்களில் அதனை சரி செய்யவும், பாசி படர்ந்த குடிநீர் தொட்டிகளை போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Next Story