திருவண்ணாமலையில் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது. இங்கு பொதுக்கழிவறை, குப்பை தொட்டி அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை,
மாவட்டத்தில் தொற்று நோய், டெங்கு போன்ற காய்ச்சல் பரவாமல் இருக்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. மர்ம காய்ச்சல் பரவும் பகுதிகளில் டாக்டர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பின்னர் காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் இங்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் நோய் பரவும் வகையில் சுகாதார சீர்கேடாக மருத்துவமனை உள்ளது.
மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் அருகில் வெளிப்புறத்தில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் மருத்துவமனைக்கு எதிரில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்தவர்கள் குப்பைகளை மருத்துவமனையின் சுற்றுச்சுவர் அருகில் கொட்டி செல்கின்றனர்.இதனால் அந்த பகுதி குப்பை நிறைந்து காணப்படுகிறது. மேலும் சிலர் குப்பைகள் இருக்கும் இடத்திலேயே கழிவு நீரையும் கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பையும், கழிவு நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. அந்த இடத்தில் ஈக்களும், கொசுக்களும், புழுக்களும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆனால் அந்த இடத்தில் தான் சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், டெங்கு பரவுவதை தடுக்க வேண்டும் என்று மருத்துவமனையின் சுற்று சுவரில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளும், அவர்களது உதவிக்கு வருபவர்களும் பயன்படுத்தும் வகையில் போதிய கழிவறைகள் இல்லை. இதனால் சிலர் மருத்துவமனைக்கு வெளியே வந்து சிறுநீர் கழித்து விட்டு செல்கின்றனர். இதனால் மருத்துவமனை வெளிப்பகுதியில் சுத்தமின்றி உள்ளது.இந்த நிலையில் நாடு முழுவதும் ‘தூய்மையே சேவை’ என்று மத்திய அரசின் பிரசார நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப்பணி மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, மருத்துவமனைக்கு வரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவமனைக்கு வெளி புறத்தில் பொது கழிவறையும், குப்பை தொட்டியும் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் மருத்துவமனையின் வெளிப்புறத்தில் கொட்டப்படும் குப்பைகளை தினமும் அகற்றியும், பிளிசிங் பவுடன் அடித்து சுகாதாரத்தை காக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.