புதிய தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தல்


புதிய தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-25T02:31:13+05:30)

கீழையூர் ஒன்றியத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த மேலப்பிடாகை கடைத்தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கீழையூர் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பாலா கலந்து கொண்டு பேசினார்.

இந்தியா முழுவதும் பல லட்சம் காலி பணியிடங்களில் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கீழையூர் ஒன்றியத்தில் கிடைக்கக்கூடிய வைக்கோல், மாம்பழம், மல்லிகைப்பூ உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கீழையூர் ஒன்றியத்தில் புதிதாக தொழிற்சாலைகளை தொடங்கி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

மத்திய-மாநில அரசுகள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை திணிக்கக்கூடாது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு கீழையூர் சங்க ஒன்றிய தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜா பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கீழையூர் கடைத்தெருவில் தொடங்கிய பேரணி வெண்மணச்சேரி, திருவாய்மூர், திருக்குவளை, மேலவாழக்கரை, வாழக்கரை, மீனம்பநல்லூர், களத்திடல்கரை, பாலக்குறிச்சி, சின்னத்தும்பூர், பெரியத்தும்பூர், சோழவித்தியாபுரம், கருங்கண்ணி வழியாக மேலப்பிடாகையில் முடிவடைந்தது. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் பேரணியை முடித்து வைத்தார். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story