காவிரி மகாபுஷ்கர விழா விடையாற்றி உற்சவம்: மயிலாடுதுறை துலாகட்டத்தில் தீர்த்தவாரி


காவிரி மகாபுஷ்கர விழா விடையாற்றி உற்சவம்: மயிலாடுதுறை துலாகட்டத்தில் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 24 Sep 2017 10:45 PM GMT (Updated: 24 Sep 2017 9:03 PM GMT)

காவிரி மகாபுஷ்கர விழா விடையாற்றி உற்சவத்தையொட்டி மயிலாடுதுறை துலாகட்டத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனிதநீராடினர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள துலாகட்டத்தில் 144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மகாபுஷ்கர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி துலாகட்டத்தில் காவிரி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு தீர்த்தவாரியுடன் பக்தர்கள் நீராட தொடங்கினர். அதனை தொடர்ந்து 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனிதநீராடி சென்றனர். இந்த விழா நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.

நேற்று காவிரி மகாபுஷ்கர விழாவின் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காசிவிஸ்வநாதர் கோவில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளலார் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் இருந்து அஸ்திர தேவர்கள் மேள-தாளத்துடன் புறப்பட்டு காவிரி துலாகட்டத்தை அடைந்தன. பின்னர் காவிரி ஆற்றில் அஸ்திர தேவர்களுக்கு புனிதநீர், பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 2 அஸ்திர தேவர்களையும் ஒரே நேரத்தில் காவிரியில் நீராட செய்து தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனிதநீராடி சாமி வழிபாடு செய்தனர். காவிரி துலாகட்டத்தில் கடந்த 12-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட காவிரி அம்மனுக்கு 48 நாட்கள் வரை மண்டலாபிஷேகம் நடைபெறும். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடையாற்றி உற்சவத்தையொட்டியும் இரவு-பகல் பாராமல் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனிதநீராடினர். புனிதநீராடிய ஏராளமான பக்தர்கள் மயிலாடுதுறையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், வள்ளலார் கோவில், மயூரநாதர் கோவில், ஐயாறப்பர் கோவில், பரிமளரெங்கநாதர் கோவில், கேதாரநாதர் கோவில் ஆகிய கோவில்களில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story