அமைச்சர்கள் முன்னுக்கு பின் கருத்துக்களை தெரிவிப்பதால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்


அமைச்சர்கள் முன்னுக்கு பின் கருத்துக்களை தெரிவிப்பதால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 24 Sep 2017 11:00 PM GMT (Updated: 24 Sep 2017 9:18 PM GMT)

அமைச்சர்கள் முன்னுக்கு பின் கருத்துக்களை தெரிவிப்பதால் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் என்று சேலத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

சேலம்,

சேலம் மளிகை சில்லரை வியாபாரிகள் சங்கத்தின் 45-ம் ஆண்டு தொடக்க விழா, கல்வி பரிசளிப்பு மற்றும் மகாசபை கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும், சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் (ஜி.எஸ்.டி) தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்றும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதன் முதலில் குரல் கொடுத்தார். ஆனால் தற்போது அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. தமிழக அமைச்சர்கள் முன்னுக்கு பின் பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பதால் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

எனவே, ஜெயலலிதா சாவில் உள்ள மர்மத்தை போக்க வேண்டும் என்றால் சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஜனாதிபதி மற்றும் தமிழக கவர்னர் ஆகியோரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வணிகர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அப்படி இல்லையென்றால் கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களை உள்ளடக்கி தென்மாநில மண்டலம் உருவாக்கப்பட்டு, ஜி.எஸ்.டி.க்கு எதிராக முதற்கட்டமாக கேரளாவில் போராட்டம் நடத்தப்படும்.

26-ந்தேதி (அதாவது நாளை) சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் வணிகர்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் சட்டங்களை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

கடைகளில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. ஆனால் சில ரவுடிகள், வியாபாரிகளை மிரட்டி அரசியல் கட்சி பிரமுகர்களின் துணையோடு குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய வற்புறுத்தி பணம் வசூலிக்கிறார்கள். எனவே, வியாபாரிகளை மிரட்டும் ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கள்ளநோட்டு புழக்கம் தற்போது அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

முன்னதாக நடந்த கூட்டத்தில், சங்க தலைவர் பெரியசாமி, செயலாளர் செல்வக்குமார், உதவி தலைவர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், 10 மற்றும் பிளஸ்-2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Next Story