பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது


பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 24 Sep 2017 10:22 PM GMT (Updated: 2017-09-25T03:51:58+05:30)

பெங்களூருவில், திருமணம் செய்து கொள்ளும்படி வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய சென்னை என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூருவில், திருமணம் செய்து கொள்ளும்படி வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய சென்னை என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். இவர், ஏற்கனவே கைதாகி ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது.

விஜயாப்புராவை சேர்ந்தவர் அமீத் குமார் கூடிக்னூர். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றிய கேரளாவை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் பெங்களூரு தொட்டனேகுந்தியில் ஒயிட்பீல்டுவில் வசித்து வருகிறார். திருமணம் ஆன அந்த பெண்ணுக்கு கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து பெங்களூரு வரும் அமீத் குமார் அடிக்கடி அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், அந்த பெண்ணின் இ–மெயிலுக்கு அவர் அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று பெங்களூரு வந்த அமீத் குமார் அந்த பெண் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் உள்ள வீட்டுக்கு அவர் சென்றார். அங்கு வைத்து கத்தியை காட்டி மிரட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண்ணை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கையில் இருந்த கத்தியை அவர் தவறவிட்டார். இதனால், அந்த கத்தி கீழே விழுந்தது. அப்போது, அவரிடம் இருந்து தப்பித்த பெண் கூச்சலிட்டார்.

இந்த வேளையில், அங்கிருந்து அமீத்குமார் ஓடிவிட்டார். இதுகுறித்து அந்த பெண் ஒயிட்பீல்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அமீத் குமாரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணுக்கு ஏற்கனவே இதேபோல் தொல்லை கொடுத்ததாக அமீத் குமார் கைதாகி ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story