பெங்களூரு மாநகராட்சி புதிய மேயராக சம்பத்ராஜ் தேர்வு பா.ஜனதா வேட்பாளரை நிறுத்திவிட்டு தேர்தலை புறக்கணித்தது
பெங்களூரு மாநகராட்சி புதிய மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சம்பத்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த பத்மாவதி நரசிம்மமூர்த்தி துணை மேயரானார். பா.ஜனதா வேட்பாளரை நிறுத்திவிட்டு தேர்தலை புறக்கணித்தது.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சி மேயராக இருந்த பத்மாவதியின் ஓராண்டு பதவி காலம் கடந்த 27–ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் 28–ந் தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று மண்டல கமிஷனரான தேர்தல் அதிகாரி ஜெயந்தி அறிவித்து இருந்தார். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்தது. மேயர் பதவியை காங்கிரசும், துணை மேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) கட்சியும் பகிர்ந்து கொண்டன.
ஏற்கனவே அறிவித்தப்படி மேயர், துணை மேயர் தேர்தல் பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஆளும் காங்கிரஸ் சார்பில் தேவர்ஜீவனஹள்ளி வார்டு கவுன்சிலர் சம்பத்ராஜும், பா.ஜனதா சார்பில் காடுகோடி வார்டு கவுன்சிலர் முனுசாமியும் மனு தாக்கல் செய்தனர். துணை மேயர் பதவிக்கு ஜனதா தளம்(எஸ்) சார்பில் பத்மாவதி நரசிம்மமூர்த்தியும், பா.ஜனதா சார்பில் மமதா வாசுதேவும் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து தேர்தல் நடைபெறும் மன்ற கூட்ட அரங்கத்திற்கு வாக்காளர்கள் வந்தனர். காங்கிரசை சேர்ந்த எம்.பி.க்கள் வீரப்பமொய்லி, ஆஸ்கர் பெர்ணான்டஸ், ஜெய்ராம் ரமேஷ், ராமமூர்த்தி, ராஜூகவுடா, ரகுமான்கான், ஹரிபிரசாத், டி.கே.சுரேஷ் மாநில மந்திரிகள் ராமலிங்கரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், எச்.எம்.ரேவண்ணா, சீதாராம், கிருஷ்ண பைரேகவுடா, கிருஷ்ணப்பா, ரோஷன் பெய்க் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் வந்தனர்.
பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆர்.அசோக், அரவிந்த் லிம்பாவளி விஸ்வநாத், முனிராஜூ, அக்கட்சியின் எம்.எல்.சி.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். ஜனதா தளம்(எஸ்) சார்பில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சரியாக 11.30 மணிக்கு தேர்தல் அதிகாரி ஜெயந்தி இருக்கைக்கு வந்தார். மேலும் பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் சங்கர், மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் ஆகியோரும் இருக்கையில் வந்து அமர்ந்தனர்.
முதலில் வாக்காளர்களின் வருகை குறித்து தேர்தல் பணியாளர்கள் அவர்களின் கையெழுத்துகளை பெற்றனர். இந்த பணி சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மேயரை தேர்ந்து எடுக்கும் பணிகளை தேர்தல் அதிகாரி ஜெயந்தி அறிவித்தார். மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் சம்பத்ராஜ் 3 மனுக்களையும், பா.ஜனதா வேட்பாளர் முனுசாமி 4 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளதாகவும், துணை மேயர் பதவிக்கு ஜனதா தளம்(எஸ்) சார்பில் பத்மாவதி நரசிம்மமூர்த்தியும், பா.ஜனதா சார்பில் மமதா வாசுதேவும் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் அதிகாரி கூறினார்.
மனுக்களை வாபஸ் பெற 2 நிமிடங்கள் கால அவகாசம் வழங்குவதாக அவர் அறிவித்தார். அப்போது மந்திரி ராமலிங்கரெட்டி எழுந்து, மேயரை ஒருமனதாக தேர்ந்து எடுக்க வசதியாக பா.ஜனதா வேட்பாளர் மனுவை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொண்டார். இதை நிராகரித்த பா.ஜனதாவினர், உங்களுக்கு தான் பெரும்பான்மை எண்ணிக்கை குறைவாக உள்ளது, வேண்டுமானால் நீங்கள் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்தனர்.
மேலும் பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து நின்று காங்கிரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காங்கிரஸ் கட்சி போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி குற்றம்சாட்டினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து பா.ஜனதாவுக்கு எதிராக முழக்கமிட்டனர். காங்கிரஸ் ஒழிக என்று பா.ஜனதாவினரும், பா.ஜனதா ஒழிக என்று காங்கிரசாரும் குரலை உயர்த்தி கோஷமிட்டதால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது. தேர்தல் அதிகாரி என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் அமைதி காத்தார்.
யார் என்ன பேசுகிறார்கள் என்பது காதில் விழாத அளவுக்கு பேச்சு சத்தம் அதிகமாக இருந்தது. அத்துடன் சபையில் கூச்சல்–குழப்பம் நிலவியது. அதைதொடர்ந்து தேர்தல் அதிகாரி ஜெயந்தியின் இருக்கையை முற்றுகையிட்டு பா.ஜனதா உறுப்பினர்கள் தொடாந்து 30 நிமிடங்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆனால் சிறிது நேரம் மட்டும் பதிலடி கொடுத்த காங்கிரசார் பிறகு இருக்கையில் அமர்ந்து அமைதி காத்தனர். பா.ஜனதாவினர், “காங்கிரஸ்...போகஸ்“ என்று தொடர்ந்து கோஷமிட்டனர்.
மேயர் தேர்தல் பணிகளை தேர்தல் அதிகாரி தொடங்குவதாக கூறினார். பகல் 12.20 மணிக்கு பா.ஜனதா உறுப்பினர்கள் தேர்தலை புறக்கணித்துவிட்டு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் காலியாக இருந்தன. வெளிநடப்பு செய்தபோது பா.ஜனதாவினருக்கு இந்திரா உணவகத்தில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கிண்டலாக கூறினர்.
அதன் பிறகு மேயரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் சம்பத்ராஜை ஆதரிப்பவர்கள் கைகளை உயர்த்துமாறு தேர்தல் அதிகாரி கூறினார். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் உறுப்பினர்கள் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர். சம்பத்ராஜுக்கு 139 ஓட்டுகள் கிடைத்தன. இதையடுத்து அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். பா.ஜனதா உறுப்பினர்கள் தேர்தலை புறக்கணித்ததால் அந்த கட்சியின் வேட்பாளர் முனுசாமிக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை.
அதைத்தொடர்ந்து துணை மேயர் தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் பத்மாவதி நரசிம்மமூர்த்திக்கு 138 ஓட்டுகள் கிடைத்தன. அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரு வாக்காளர் ஏதோ வேலையாக எழுந்து வேலையே சென்றுவிட்டதால் துணை மேயருக்கு ஒரு ஓட்டு குறைவாக கிடைத்ததாக தேர்தல் அதிகாரி ஜெயந்தி கூறினார்.
காலை 11.30 மணிக்கு தொடங்கிய மேயர் தேர்தல் சரியாக பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தல் முடிந்ததும் புதிய மேயர் சம்பத்ராஜ், துணை மேயர் பத்மாவதி நரசிம்மமூர்த்தி ஆகியோருக்கு மந்திரிகள் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதிய மேயராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள சம்பத்ராஜ் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
தேர்தலில் பங்கேற்க வருவதற்கு முன்பு காலை 10 மணியளவில் கெம்பேகவுடா சிலை முன்பு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெங்களூருவில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதை தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேயர் தேர்தலையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாக்காளர்கள் மற்றும் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி வழங்கப்பட்டது. தேர்தல் நடைபெற்ற மன்ற அரங்கத்திற்கு முன்பு போலீசார் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு அரண் அமைத்தனர். முக்கிய தலைவர்களின் வாகனங்களை தவிர பிற வாகனங்களை போலீசார் மாநகராட்சி வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை.