‘தே.மு.தி.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் விஜயகாந்த்’


‘தே.மு.தி.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் விஜயகாந்த்’
x
தினத்தந்தி 1 Oct 2017 5:30 AM IST (Updated: 1 Oct 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

தே.மு.தி.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக காரைக்குடியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கட்சியை வழிநடத்தும் முழு அதிகாரத்தையும் விஜயகாந்திற்கே வழங்கியும், அவரே நிரந்தர பொதுச்செயலாளராக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து கட்சியின் புதிய நிர்வாகிகளை விஜயகாந்த் அறிவித்தார். அதன்படி அவைத்தலைவராக மோகன்ராஜ், பொருளாளராக டாக்டர் இளங்கோ, துணைச் செயலாளர்களாக எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி, பேராசிரியை சந்திரா, இளங்கோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் விஜயகாந்த் பேசியதாவது:-

நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். காலம் கடந்தாலும் தமிழகத்திற்கு புதிய கவர்னரை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். தமிழகத்திற்கு பணியாற்ற வருகை தரும் கவர்னருக்கு வாழ்த்துகள். நாடு முழுவதும் கல்வியில் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும். பின்னர் அதற்கேற்ப தகுதித் தேர்வுகளை கொண்டுவர வேண்டும். தமிழக மாணவர்கள் திறமை மிக்கவர்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வலிமை மிக்கவர்கள். அவர்களின் எதிர்காலத்தை சிறக்கச் செய்ய வேண்டும்.

தமிழகம் நலம் பெறவும், இந்தியா வளம் பெறவும் ஆண்ட, ஆளுகின்ற கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். நொய்யல் ஆற்றில் கலந்து வரும் ரசாயன கழிவுகளால், அந்த ஆற்று நீரை குடிக்கவோ, குளிக்கவோ, விவசாயத்திற்கோ பயன்படுத்தவோ முடிவதில்லை. இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன் எரிவாயு திட்டம் உள்பட பல்வேறு மக்கள் விரோத திட்டங்களுக்கு அவர்களது ஆட்சிக்காலத்தில் அனுமதி அளித்த தி.மு.க., தற்போது அதற்கு எதிராக ஆர்ப்பரிப்பது அரசியல் கபட நாடகமே. இதனை மக்களும் புரிந்துள்ளனர். பெட்ரோல், டீசல் உயர்வினை தே.மு.தி.க. வன்மையாக கண்டிக்கிறது. இதனை கண்டித்து நாளை (2-ந்தேதி) தே.மு.தி.க. மக்களோடு சேர்ந்து போராட்டம் நடத்தும். தமிழக ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், உயர்மட்டக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் திருவேங்கடம், பொருளாளர் அருணா கண்ணன், துணைச் செயலாளர்கள் துரை பாஸ்கரன், மாயழகு, மாவட்ட இளைஞரணி செயலாளர் சாய் சுரேஷ், மகளிரணி செயலாளர் அங்கயற்கண்ணி உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story