தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் 2–வது சீசன் ‘களை’ கட்டியது


தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் 2–வது சீசன் ‘களை’ கட்டியது
x
தினத்தந்தி 1 Oct 2017 4:00 AM IST (Updated: 1 Oct 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறை எதிரொலியாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். இதனால் 2–வது சீசன் ‘களை’ கட்டி உள்ளது.

ஊட்டி,

ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தியையொட்டி கல்லூரி, தனியார் நிறுவனங்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த தொடர் விடுமுறையை மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஊட்டி நகரில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாகவே காணப்படுகிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2–வது சீசனையொட்டி 10 ஆயிரம் பூந்தொட்டிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக மலர்மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பெரணி இல்லம் அருகில் மலர் செடிகளால் சிறிய பூங்கா போன்று அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அதில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குவதால், மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து நுழைவுச்சீட்டை பெற்று, பூங்காவில் உள்ள மலர் அலங்காரங்களை கண்டு ரசித்தனர். மேலும் அங்குள்ள பெரிய புல்வெளி, இத்தாலியன் கார்டன், ஜப்பான் பூங்கா, இலை பூங்கா, பெரணி இல்லம், பழமை வாய்ந்த மரங்கள் உள்ளிட்டவற்றை பார்த்து மகிழ்ந்தனர்.

ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா மலை சிகரம் தென்னிந்தியாவின் உயர்ந்த மலை சிகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தொடர் விடுமுறையையொட்டி தொட்டபெட்டா மலை சிகரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நேற்று அதிகரித்து இருந்ததை காண முடிந்தது. தொட்டபெட்டா காட்சி முனையில் இருந்து மேட்டுப்பாளையம், ஊட்டி நகரம், கர்நாடகா மாநில எல்லை உள்ளிட்டவற்றை தொலைநோக்கி வழியாக சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியதால், நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சவாரி செய்தனர். இதுதவிர ரோஜா பூங்கா, ஊட்டி–கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, சூட்டிங்மட்டம், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தொடர் விடுமுறை எதிரொலியாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், சேரிங்கிராஸ், ஊட்டி–கோத்தகிரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் நீண்டவரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளதால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். மேலும் ஊட்டியில் தற்போது நிலவும் 2–வது சீசன் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் ‘களை’ கட்டி உள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக குன்னூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று குன்னூர் சிம்ஸ்பூங்கா, டால்பின்நோஸ், லேம்ஸ்ராக் போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கார்கள், வேன்கள் போன்ற வாகனங்களில் வந்திருந்தனர்.

இதன் காரணமாக குன்னூர்–கோத்தகிரி சாலை மற்றும் லேம்ஸ்ராக் செல்லும் ஆடர்லி சாலை ஆகிய ரோடுகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சிம்ஸ் பூங்காவில் மலர்ந்திருந்த மலர்களையும், அங்குள்ள பழமை வாய்ந்த ருத்திராட்சை உள்பட மரங்களையும் அவர்கள் கண்டு ரசித்தனர். செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். லேம்ஸ்ராஸ், டால்பின்நோஸ் காட்சி முனைகளில் நின்று கொண்டு சமவெளி பகுதியையும், மலை மீது வந்து மோதிய மேக கூட்டத்தையும் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.


Next Story