அரசு கேபிள் டி.வி. விலையில்லா செட்டாப் பாக்ஸ் நிறுவ கூடுதல் தொகை வசூலித்தால் புகார் செய்யலாம்
அரசு கேபிள் டி.வி. விலையில்லா செட்டாப் பாக்ஸ் நிறுவ கூடுதல் தொகை வசூலித்தால் சந்தாதாரர்கள் புகார் செய்யலாம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
ராமநதபுரம்,
அரசு கேபிள் டி.வி. விலையில்லா செட்டாப் பாக்ஸ் நிறுவ கூடுதல் தொகை வசூலித்தால் சந்தாதாரர்கள் புகார் செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்–அமைச்சர் கடந்த 1–ந்தேதி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கி டிஜிட்டல் ஒளிபரப்பு சேவைக்கான எம்பெக்–4 தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தப்பட்ட கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து முதல் கட்டமாக 32,000 செட்டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டு உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலமாக சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்களை விலையில்லாமல் வழங்க வேண்டும். இதனை சந்தாதாரர்களின் இடத்தில் நிறுவி செயலாக்கம் செய்வதற்காக ரூ.200 ஒருமுறை மட்டும் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது. விலையில்லா செட்டாப் பாக்ஸ் என்பதால் நிறுவுதல் மற்றும் செயலாக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.200–க்கு மேல் சந்தாதாரர்கள் கூடுதலாக தொகை ஏதும் செலுத்த தேவையில்லை.
இதற்குமேல் கூடுதல் தொகை வசூலிப்பவர்கள் மீது புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911–க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.