வயிற்றில் ஆபரேஷன் செய்யும்போது சிறுநீர் பையில் காயம்: மருத்துவமனை நிர்வாகம் நோயாளிக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
வயிற்றில் ஆபரேஷன் செய்யும்போது சிறுநீர் பையில் காயம்: மருத்துவமனை நிர்வாகம் நோயாளிக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு.
மதுரை,
மதுரை சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் மணி. இவர் மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
எனக்கு தொடர்ந்து சில நாட்கள் வயிற்று வலி இருந்தது. இதனால் சிகிச்சைக்காக 28.4.2009 அன்று மதுரை கீழவெளிவீதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு என்னை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் நான் ‘விரைவாதம்’ நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறினர். அன்று இரவே எனக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. 11 நாட்கள் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். எனக்கு ஆபரேஷன் செய்யும்போது சிறுநீர் பையில் காயம் ஏற்பட்டிருந்தது சில நாட்களுக்கு பின்னர்தான் தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனைக்கு சென்று கேட்டபோது சரியான பதில் கூறவில்லை. இதுதொடர்பாக எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. வெளிநபர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. டாக்டர்களின் கவனக்குறைவால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே மருத்துவமனை நிர்வாகம் எனக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு மதுரை நுகர்வோர் கோர்ட்டில் நீதிபதி பாலசுந்தரகுமார், உறுப்பினர் பாக்கியலெட்சுமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், ‘‘ஆபரேஷன் செய்த டாக்டர்களின் கவனக்குறைவினால் தான் மனுதாரருக்கு சிறுநீர் பையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு ரூ.15 ஆயிரத்தை நஷ்டஈடாகவும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.3 ஆயிரமும் மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும். மேலும் சிறுநீர் பையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்ததற்காக பெறப்பட்ட கட்டணம் ரூ.5 ஆயிரத்தை திருப்பி செலுத்த வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.