ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் வர்த்தக கழக பொதுக்குழுவில் தீர்மானம்


ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் வர்த்தக கழக பொதுக்குழுவில் தீர்மானம்
x
தினத்தந்தி 30 Sep 2017 11:00 PM GMT (Updated: 30 Sep 2017 10:03 PM GMT)

வணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த மாவட்ட வர்த்தக கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்ட வர்த்தக கழக 37-வது பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ராமச்சந்திரன், மார்ட்டின், சுல்தான் அலாவுதீன், அருள் இளங்கோ, சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். பொருளாளர் மீரான் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சில்லறை வணிகத்தை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஜி.எஸ்.டி.வரி மத்திய அரசும், மாநில அரசும் தனித்தனியாக வசூல் செய்கிறது. வணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.

தாமிரபரணி ஆற்றில் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதை மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டும். நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில், மாவட்ட துணை செயலாளர் சாலமோன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சண்முகையா பாண்டியன், வர்த்தக கழக நிர்வாகிகள் செல்வக்குமார், ரசூல் முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story