டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆறுதல்


டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆறுதல்
x
தினத்தந்தி 1 Oct 2017 4:30 AM IST (Updated: 1 Oct 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், ராமச்சந்திரன் ஆகியோர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து பழவகைகளை கொடுத்து ஆறுதல் கூறினர். மேலும் இவர்கள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

இவர்களுடன் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, ரவிச்சந்திரன், முரளிதரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், மருத்துவ அணி அமைப்பாளர் அஞ்சுகம்பூபதி, விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராஜராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் சுகாதார பணிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை. அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் அப்படி எந்த குழுவும் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்படவில்லை. இருக்கும் டாக்டர்கள், செவிலியர்களை வைத்து கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் இறந்ததாக பதிவு எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் கிராமப்புறங்களில் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். எனவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகஅரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து டாக்டர்கள் கூறும்போது, காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் டெங்கு காய்ச்சல் இல்லை. 11 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 30 பேர் குணம் அடைந்துள்ளனர். சிலருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 6 பேர் வீதம் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள் என்றனர். 

Related Tags :
Next Story