மேட்டூர் அணை நீர்மட்டம் 93 அடியாக உயர்ந்தது


மேட்டூர் அணை நீர்மட்டம் 93 அடியாக உயர்ந்தது
x
தினத்தந்தி 1 Oct 2017 4:30 AM IST (Updated: 1 Oct 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை நீர்மட்டம் 93 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளதால், அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக இந்த மழை சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தீவிரம் அடைந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடிக்குமேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீருடன் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழைநீரும் கலந்து வந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது.

நேற்று முன்தினம் அதிகபட்சமாக அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரத்து 221 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் திறப்பைவிட அணைக்கு வரும் நீரின் அளவு பலமடங்கு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 90.70 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 93 அடியாக உயர்ந்தது.

இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, நாளை பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இதற்கிடையே, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரத்து 558 கனஅடியாக குறைந்துள்ளது. எனவே, மீண்டும் மழை தீவிரம் அடைய வேண்டுமென டெல்டா பாசன விவசாயிகள் வருணபகவானை வேண்டி வருகிறார்கள். 

Related Tags :
Next Story