செல்போன் ரீசார்ஜ் கடை உள்பட அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு போலீசார் வலைவீச்சு


செல்போன் ரீசார்ஜ் கடை உள்பட அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Oct 2017 4:30 AM IST (Updated: 1 Oct 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் செல்போன் ரீசார்ஜ் கடை உள்பட அடுத்தடுத்து 4 கடைகளில் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் நடுத் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 32). இவர், பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் காமராஜர் சிலை எதிரே செல்போன் ரீசார்ஜ் கடை வைத்து நடத்தி வருகிறார். அதோடு எலக்ட்ரிக்கல் வேலையும் சேர்த்து செய்து வருகிறார். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, தொழில் விருத்திக்காக பூஜை நடத்திய பின்னர் கடையை பூட்டி விட்டு செல்வம் தனது வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் கடையை திறந்து செல்வம் உள்ளே சென்ற போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அப்போது தான், கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்து 3 மடிக்கணினிகள் (லேப்டாப்), ஒரு செல்போன், ரூ.2,500 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதே போல் அருகிலுள்ள சலூன்கடை மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த ரூ.200, பெட்டிக்கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் சாக்லெட்டு உள்ளிட்ட மிட்டாய்களையும் திருடி சென்றிருக்கின்றனர். மேலும் அங்கிருந்த ஒரு தனியார் நிறுவன டயர்கள் விற்பனை செய்யும் கடையின் மேற்கூரையையும் உடைத்து உள்ளே நுழைந்த அந்த நபர்கள் அங்கிருந்த இருசக்கர வாகன டயர்கள், கார் டயர்களையும் அள்ளி சென்றுள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருட்டு நடந்த கடைகளை பார்வையிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் விரல்ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு திருடர்களின் விரல்ரேகை ஏதும் பதிவாகியிருக்கிறதா? என சோதனை செய்தனர். அங்குள்ள கடைகளிலிருந்த சி.சி.டி.வி. கேமராவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் உருவம் பதிவாகியிருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் ரீசார்ஜ்கடை, சலூன், பெட்டிக்கடை, டயர்விற்பனை செய்யும் கடை என அடுத்தடுத்து 4 கடைகளின் மேற்கூரையை உடைத்து நடந்த திருட்டு சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அந்த கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தை ஒட்டிய பகுதியில் மட்டும் கடந்த சில மாதங்களில் 20-க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகளில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வரும்நிலையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் குறித்து எந்தவித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருவது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் அறிவுறுத்தலின்பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்து, களவு பொருட்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story