வேலூர் புது பஸ்நிலையம் அருகே முன்விரோத தகராறில் ஆட்டோ டிரைவர் கொலை வாலிபர் கைது


வேலூர் புது பஸ்நிலையம் அருகே முன்விரோத தகராறில் ஆட்டோ டிரைவர் கொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Sep 2017 10:48 PM GMT (Updated: 30 Sep 2017 10:48 PM GMT)

வேலூர் புது பஸ்நிலையம் அருகே குடிபோதையில் வாலிபர் தாக்கியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர்,

வேலூர் அப்துல்லாபுரத்தை அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் மதன் (வயது 33). முத்துமண்டபத்தை சேர்ந்தவர் கோபி (24). இருவரும் புது பஸ்நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தனர். மதன், கோபி ஆகியோருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு 11 மணியளவில் புது பஸ்நிலையம் அருகே கோபிக்கும், மதனுக்கும் இடையே திடீரென வாக்குவாதமும், அதன்பின் னர் தகராறும் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆயுதபூஜை என்பதால் புது பஸ்நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டுபவர்கள் முத்து மண்டபத்தில் ஒன்றாக சேர்ந்து பூஜை செய்தனர். அதில் கலந்து கொள்ள கோபியும் வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

முன்விரோத தகராறு காரணமாக கோபி அங்கு நின்று கொண்டிருந்த மதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திடீரென மதனை கீழே பிடித்து தள்ளினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர்.

Next Story