ராமேசுவரம் கோவிலில் 30 ஆண்டுகளுக்குமுன் மாயமான சிலை பற்றி விசாரணை நடத்த சிறப்பு குழு


ராமேசுவரம் கோவிலில் 30 ஆண்டுகளுக்குமுன் மாயமான சிலை பற்றி விசாரணை நடத்த சிறப்பு குழு
x
தினத்தந்தி 2 Oct 2017 5:15 AM IST (Updated: 1 Oct 2017 11:08 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலை பற்றி சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

ராமேசுவரம்,

தமிழக கோவில்களில் உள்ள சிலைகளின் விவரங்கள் பற்றி ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதன் சிறப்பு விசாரணை அதிகாரியாக போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் ஆய்வு செய்வதற்காக நேற்று ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வந்திருந்தார்.

கோவிலில் உள்ள சிலைகளின் விவரம் பற்றி அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமணர் சிலை காணாமல் போனது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதுபற்றி எந்த தகவலும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:–

ராமேசுவரம் கோவிலில் 148 ஐம்பொன் சிலைகளும், 2 தங்க சிலைகளும், 3 வெள்ளி சிலைகளும் உள்ளன. மேலும் ராமநாதசாமி கோவில் மற்றும் அதன் 31 உப கோவில்களில் 378 கற்சிலைகள் உள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் லட்சுமணர் சிலை காணாமல் போனது பற்றி சிறப்பு குழு அமைத்து விசாரிக்கப்படும்.

வெளிநாடுகளில் இருந்து இதுவரை ரூ.150 கோடி மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் வெளிநாடுகளுக்கு கடத்த வைத்திருந்த ரூ.350 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து கோவில்களுக்கும் சென்று அங்குள்ள விவரங்களை சேகரித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story