தொடர் விடுமுறை எதிரொலி: சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தொடர் விடுமுறை எதிரொலி: சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 2 Oct 2017 4:00 AM IST (Updated: 1 Oct 2017 11:56 PM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறை எதிரொலியால் சுருளிஅருவியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சிறப்பு பெற்றது சுருளி அருவி. இது ராமேசுவரத்துக்கு அடுத்தபடியாக புனித தலமாக விளங்குகிறது. அடர்ந்த வனப்பகுதியில் இருந்து பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து தண்ணீர் அருவியாக கொட்டுகிறது. இதில் குளித்தால் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் தொடர் விடுமுறை காரணமாக நேற்று சுருளி அருவியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் பெரிதும் அவதி அடைந்தனர்.

இதற்கிடையே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுருளி அருவியில் குளித்தனர். வழக்கமாக சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் நேற்று ஒருசிலா போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் முண்டியடித்து கொண்டு சென்றனர். அப்போது சுற்றுலா பயணிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. அங்கிருந்த சுற்றுலா பயணிகள் கைகலப்பில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதனால் அருவி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, சுருளி அருவியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் குவிந்த நிலையில் பாதுகாப்பு பணிக்காக போதுமான போலீசார் இல்லாதது வேதனையாக இருக்கிறது. இதனால் உடைமைகளை வைத்து விட்டு செல்ல முடியவில்லை. எனவே இனிவரும் காலங்களில் சுருளி அருவியில் நிரந்தரமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மேலும், அருவியில் குளித்து விட்டு பெண்கள் உடை மாற்ற போதிய இடவசதி இல்லை. அருவியில் குளிக்க கட்டணம் வசூல் செய்யும் வனத்துறையினர் அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story