தொடர் விடுமுறை: முதுமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை காரணமாக முதுமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் புகழ்பெற்றது முதுமலை புலிகள் காப்பகம். இங்கு காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள், விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. வன விலங்குகளை காண பல்வேறு இடங்களில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
முதுமலை தெப்பக்காடு– கக்கனல்லா, தெப்பக்காடு–மசினகுடி, தெப்பக்காடு– தொரப்பள்ளி ஆகிய சாலையோரங்களில் காட்டெருமைகள், மான்கள் போன்ற வன விலங்குகள் சுற்றித்திரிவதை காணலாம். மேலும் இந்த சாலைகளில் அடிக்கடி காட்டு யானைகளும் கடந்து செல்வதை காணமுடியும். இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கிறார்கள்.
மேலும் வனத்துறையினர் வாகன சவாரி, யானை சவாரி போன்றவைகளை நடத்துகிறார்கள். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் காட்டுக்குள் அழைத்து செல்லப்பட்டு வன விலங்குகளை பார்வையிட ஏற்பாடு செய்கிறார்கள். இடமட்டுமின்றி தெப்பக்காடு வளர்ப்பு யானைகளையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட காலை, மாலை நேரங்களில் அனுமதி அளிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 29–ந் தேதி முதல் இன்று (திங்கட்கிழமை) வரை தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் முதுமலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதன் காரணமாக அங்குள்ள வனத்துறை விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
தெப்பக்காடு வரவேற்பு மையத்தில் சுற்றுலா பயணிகள் யானை சவாரி, வாகன சவாரி செய்ய ஆர்வத்துடன் காத்திருந்தனர். தொடர்ந்து நுழைவுச்சீட்டு பெற்று சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்கள், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்து குவிந்ததால் காலை, மாலை நேரங்களில் தெப்பக்காட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். முதுமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை கண்டு ரசித்து சென்றனர். ஒரு சில நேரங்களில் சாரல் மழை பெய்ததால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.