தோட்டத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த விவசாயி போலீசார் விசாரணை


தோட்டத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த விவசாயி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Oct 2017 4:45 AM IST (Updated: 2 Oct 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே தோட்டத்தில் ரத்த காயங்களுடன் விவசாயி இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே தோவாளை பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் பொன்னையா பிள்ளை (வயது 60), விவசாயி. இவருக்கு இந்திரா குமாரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் செண்பகராமன்புதூரில் உள்ளது. நேற்று முன்தினம் பொன்னையா பிள்ளை தோட்டத்திற்கு செல்வதாக கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

அதன்பின்பு, வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், நேற்று காலையில் சானல்கரைரோட்டில் உள்ள வேறொரு தோட்டத்தில் பம்புசெட் அறையின் அருகில் இருந்த பள்ளத்தில் பொன்னையா பிள்ளை பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் ரத்த காயம் இருந்தது. அவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் சற்று தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும், ஆரல்வாய்மொழி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இறந்தவரின் மகன் சிவசுப்பிரமணியன் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பொன்னையா பிள்ளை மது போதையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது, அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story