கர்நாடகத்தில் சிகரெட், பீடி சில்லரை விற்பனைக்கு தடை விதிமீறும் வியாபாரிகளுக்கு சிறை தண்டனை


கர்நாடகத்தில் சிகரெட், பீடி சில்லரை விற்பனைக்கு தடை விதிமீறும் வியாபாரிகளுக்கு சிறை தண்டனை
x
தினத்தந்தி 2 Oct 2017 4:00 AM IST (Updated: 2 Oct 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில், சில்லரை விலையில் சிகரெட், பீடி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. விதிமீறும் வியாபாரிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் புகைப்பிடிக்கும் நபர்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரியை சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், பொதுஇடங்களிலும் சிகரெட், பீடி உள்பட புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலை பொருட்களை சில்லரை விலையில் விற்பனை செய்ய தடை செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘கடைகளில் சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சில்லரையாக விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 27–ந்தேதி முதல்க அமலுக்கு வந்துள்ளது. இதை மீறுபவர்கள் மீது ‘கோட்பா‘ சட்டத்தின் 20 பிரிவுப்படி தண்டனை வழங்கப்படும்‘ என கூறப்பட்டு உள்ளது.

இந்த புதிய உத்தரவின்படி கடைகளில் சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலை பொருட்களை சில்லரை விலைக்கு விற்பனை செய்து விதிமீறும் கடைக்காரருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அல்லது ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் ஒருசேர விதிக்கப்படும். மீண்டும், மீண்டும் விதிமீறும் நபர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்பட உள்ளது.


Next Story