அம்மனுக்கு 2 புடவைகள் உடுத்தப்பட்டதால் சர்ச்சை தனியார் தொலைக்காட்சியில் வீடியோ வெளியாகி பரபரப்பு


அம்மனுக்கு 2 புடவைகள் உடுத்தப்பட்டதால் சர்ச்சை தனியார் தொலைக்காட்சியில் வீடியோ வெளியாகி பரபரப்பு
x
தினத்தந்தி 3 Oct 2017 4:45 AM IST (Updated: 3 Oct 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

ஜம்புசவாரி ஊர்வலத்தின்போது சாமுண்டீசுவரி அம்மனுக்கு 2 பட்டுப்புடவைகள் உடுத்தப்பட்டிருந்த வீடியோ காட்சிகள் தனியார் கன்னட தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

மைசூரு,

உலகப்புகழ் பெற்ற தசரா விழாவில் சிகர நிகழ்ச்சியாக ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும். அப்போது சாமுண்டீசுவரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை ஊர்வலத்திற்கு தலைமை தாங்கும் யானை சுமந்து வரும். அதைத்தொடர்ந்து மற்ற யானைகள் வீறுநடை போட்டு வலம் வரும். இதைக்காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மைசூருவில் குவிவார்கள். இந்த நிகழ்ச்சியின்போது சாமுண்டீசுவரி அம்மனுக்கு பட்டுப்புடவை உடுத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அந்த புடவையுடனேயே அம்மன் தங்க அம்பாரியில் வீற்றிருந்து வலம் வருவார்.

அதன்படி கடந்த 25 ஆண்டுகளாக ஜம்புசவாரி ஊர்வலத்தின்போது சாமுண்டீசுவரி அம்மனுக்கு உடுத்தப்படும் பட்டுப்புடவையை பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஜவுளி வியாபாரி கொடுத்து வந்தார். ஆனால் இந்த ஆண்டு மைசூரு மாநகராட்சி மேயர் ரவிக்குமார் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு என 4 பட்டுப்புடவைகளும், முதல்–மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதி ஒரு பட்டுப்புடவையும் கொடுத்தனர்.

முதல்–மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதி, தசரா விழா தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து 10 நாட்கள் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்ததாகவும், தான் அம்மனுக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுப்பதாக வேண்டிக் கொண்டதாகவும், அதனால் தான் எடுத்த பட்டுப்புடவையைத்தான் அம்மனுக்கு உடுத்த வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.

அதேபோல், இதுவரை மைசூரு மாநகராட்சி மேயராக இருந்த யாரும் சாமுண்டீசுவரி அம்மனுக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்கப்படவில்லை என்றும், அதனால் தான் எடுத்து தந்த புடவையைத்தான் அம்மனுக்கு ஜம்புசவாரி ஊர்வலத்தின்போது உடுத்த வேண்டும் என்றும் மேயர் ரவிக்குமார் வலியுறுத்தியதாக தெரிகிறது. இது அரண்மனை குடும்பத்தார் உள்பட அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஜம்புசவாரி ஊர்வலத்தின்போது அம்மனுக்கு மேயர் எடுத்துத்தந்த பட்டுப்புடவையும், சித்தராமையாவின் மனைவி எடுத்துத்தந்த பட்டுப்புடவையும் உடுத்தப்பட்டது. அதாவது முதலில் மேயர் எடுத்துத்தந்த புடவையும், அதற்குமேல் சித்தராமையாவின் மனைவி எடுத்துத்தந்த புடவையும் அம்மனுக்கு உடுத்தப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

அதன்பிறகு அம்மன் அந்த புடவைகளுடனேயே தங்க அம்பாரியில் வீற்றிருந்து ஜம்புசவாரி ஊர்வலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தனியார் கன்னட தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மேயர் ரவிக்குமார் கூறுகையில், ‘‘நான் எடுத்துக்கொடுத்த பட்டுப்புடவையை அம்மனுக்கு உடுத்தி பூஜைகளை செய்ய வேண்டும் என்று விரும்பினேன், ஆனால் நிர்ப்பந்தம் காரணமாக அம்மனுக்கு முதல்–மந்திரி சித்தராமையாவின் மனைவி எடுத்துக்கொடுத்த புடவையையும் உடுத்தி உள்ளனர். இதனால் நான் அதிருப்தி அடைந்துள்ளேன்’’ என்று கூறினார்.

இதுகுறித்து தசரா விழாக்குழுவினர் கூறுகையில், ‘‘இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை. ஜம்புசவாரி ஊர்வலத்தின்போது அம்மனுக்கு உடுத்த வேண்டிய பட்டுப்புடவையை பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஜவுளி வியாபாரி கொடுப்பார். இந்த வி‌ஷயத்தில் யாரும் இதுவரை தலையிட்டதில்லை. ஆனால் தற்போது போட்டி போடுகிறார்கள். இது சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், மனவருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது’’ என்று கூறினர்.


Next Story