4 வழிச்சாலையில் விபத்தை தடுக்க தீவிர நடவடிக்கை போலீஸ் அதிகாரி தகவல்


4 வழிச்சாலையில் விபத்தை தடுக்க தீவிர நடவடிக்கை போலீஸ் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 3 Oct 2017 4:15 AM IST (Updated: 3 Oct 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

கருங்காலக்குடி பகுதியில் 4 வழிச்சாலையில் விபத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார்.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடி பகுதியில் தொடர் விபத்து வாடிக்கையாகிவிட்டது. 4 வழிச் சாலை பயன்பாட்டிற்கு வந்த நாட்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. இதில், பலர் உயிரிழந்துள்ளனர்.

இதுபோல், அந்த நான்கு வழிச்சாலையை மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கடந்து செல்வது பெரும் சோதனையாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சர்வீஸ் சாலை கருங்காலக்குடியில் அமைக்கப்பட்டது. ஆனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சர்வீஸ் சாலையில் செல்லாமல் மெயின் ரோட்டில் நிறுத்துவதால் மேலும் விபத்துகள் அதிகரித்தது. இதனை தொடர்ந்து நான்கு வழிச்சாலையில் எந்த வாகனங்களும் நிறுத்த கூடாது, கருங்காலக்குடியில் நிறுத்தும் அனைத்து பேருந்துகளும் சர்வீஸ் சாலையில் சென்று பயணிகளை ஏற்றி செல்ல அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில், கருங்காலக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி மற்றும் வணிக சங்கத்தினர், வாடகை கார் ஓட்டுனர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதில் துணை போலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி கூறியதாவது:- கொட்டாம்பட்டி, மேலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிக விபத்துகள் நடைபெறுகிறது. விபத்துகளை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கருங்காலக்குடியில் உயர் கோபுர மின்விளக்கு, ஒளிரும் விளக்குகள், சாலை தடுப்பு அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சாலையை கடக்கும் முன் எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டும் சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் விபத்தினை தவிர்க்க முடியும் என்றார். 

Next Story