டாக்டர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் பிரதமருக்கு இந்திய மருத்துவ கழகம் கோரிக்கை


டாக்டர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் பிரதமருக்கு இந்திய மருத்துவ கழகம் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Oct 2017 4:15 AM IST (Updated: 3 Oct 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமருக்கு இந்திய மருத்துவ கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூர்,

இந்திய மருத்துவ கழகத்தின் முன்னாள் மாநில தலைவர் டாக்டர் மோகன்தாஸ் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் தொகைக்கு ஏற்ப டாக்டர்கள் இல்லாத நிலையில் இருக்கும் டாக்டர்களை கொண்டு மருத்துவம் பார்க்கப்படுகிறது. மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவ மாணவர்களுக்கான இடங்களை அதிகமாக உருவாக்க வேண்டும். அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை மேற்கொள்ள ஆயுர்வேத டாக்டர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், அவசர சிகிச்சைக்காக வருபவர்ளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும்போது ஏற்படும் சில விபரீதங்களுக்கு டாக்டர்களையோ, மருத்துவமனைகளையோ தாக்குவது சட்டப்படி குற்றம். இதற்காக சட்டம் இருந்தும் டாக்டர்கள் தான் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே மத்தியஅரசு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். கருவுற்ற பெண்களுக்கு ஸ்கேன் செய்யும்போது குழந்தை ஆணா, பெண்ணா என்று சட்டத்திற்கு புறம்பாக டாக்டர்கள் சொல்வது இல்லை. ஆனால் பல்வேறு நிலைகளில் அரசாங்கத்தால் டாக்டர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். இழப்பீட்டு தொகையில் உச்சவரம்பு கொண்டு வர வேண்டும். மாநில மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு மத்திய மருத்துவ கவுன்சிலை கொண்டு வரக்கூடாது.

போலி டாக்டர்கள்

எம்.பி.பி.எஸ். முடித்தவுடன் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்பதை கைவிட வேண்டும். போலி டாக்டர்களை தடுக்க கடுமையான சட்டத்தை மத்தியஅரசு கொண்டு வர வேண்டும். இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமருக்கு காந்திஜெயந்தியான இன்றைக்கு(நேற்று) இந்தியா முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் அனுப்பியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தஞ்சை கிளை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் மாரிமுத்து, முன்னாள் கிளை தலைவர்கள் சிங்காரவேலு, இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story