எத்தனை மோடிகள் வந்தாலும் காங்கிரஸ் கட்சியை யாராலும் அசைக்க முடியாது முதல்–அமைச்சர் நாராயணசாமி பேச்சு
எத்தனை மோடிகள் வந்தாலும் காங்கிரஸ் கட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாள் விழா மற்றும் காமராஜர் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தலைவர்களின் படங்களுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:–
பா.ஜ.க.வினர் காங்கிரஸ் இல்லாத நாடு என்று கோஷம் போடுகின்றனர். எத்தனை மோடிகள் வந்தாலும் காங்கிரஸ் கட்சியை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. ஏனென்றால் அனுபவம், தியாகத்துடன் நாட்டிற்காக உழைத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான்.
ராகுல்காந்தி கூறும் போது, எங்கள் ஆட்சியில் நடந்த தவறு காரணமாகத் தான் மோடி ஆட்சிக்கு வந்துள்ளார் என்று கூறி தெரிவித்தார். எங்களைவிட 100 மடங்கு தற்போது தவறு மோடி செய்து வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த கிராமப்புற வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவ திட்டங்கள், வங்கிக்கடன், தொழிற்சாலை ஆகிய திட்டங்களை பெயர் மாற்றி நிறைவேற்றி வருகின்றனர்.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடந்த ஊழலை பட்டியல் போட்டு கொடுத்தால் விசாரிப்பதில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்ததாக புகார் கொடுத்தால் அவர்களை பதவியில் இருந்து சோனியாகாந்தி தூக்கி விடுவார். பா.ஜ.க.வினர் தற்போது சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை வைத்துக் கொண்டு மிரட்டுகின்றனர். இதுபோன்ற அடக்குமுறைகள் காங்கிரஸ் கட்சியினரிடம் எடுபடாது. மாற்றுக்கட்சிகளே ஆட்சியில் இருக்கக்கூடாது என்ற மனப் பக்குவத்தை மோடி தனது மனதில் இருந்து நீக்க வேண்டும்.
தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.க. பகல் கனவு கண்டாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது.
புதுச்சேரியில் நிதி நெருக்கடி இருந்தாலும் அரிசி, முதியோர் உதவித்தொகை, சென்டாக் கல்வி உதவித்தொகை வழங்குவதில் மாற்று கருத்து இருக்கக்கூடாது என கூறியுள்ளோம். மாற்று அரசு மத்தியில் இருந்தாலும் ஸ்மார்ட் சிட்டிக்கு ரூ.1,850 கோடியும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.1,450 கோடியும் பெற்று திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் தொடங்க இருப்பதையொட்டி பிரெஞ்சு குழுவினர் 9–ந் தேதி புதுச்சேரி வருகின்றனர். அவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு இதற்கான பணிகள் தொடங்கப்படும்.
நானும், அமைச்சர்களும் தீவிரமான நடவடிக்கை எடுத்ததால் டெங்கு பாதிப்பு 15 சதவீதம் குறைந்துள்ளது. அரசு மருத்துவமனையில் யாரும் சாகவில்லை, தனியார் மருத்துவமனையில்தான் 2 பேர் இறந்துள்ளனர். அமைச்சர்கள் கடுமையாக வேலை செய்தாலும், டெங்கு பாதிப்பை பூதாகரமாக்குகின்றனர்.
கடந்த 4 நாள் விடுமுறை தினத்தில் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். இங்கு தங்க இடமில்லாததால் கடலூரில் தங்கி வருகின்றனர். தொழிற்சாலை ஆரம்பிக்க 400 மனுக்கள் வந்துள்ளன. நிதி பற்றாக்குறை காரணமாக திட்டங்கள் மெதுவாக நடக்கிறது. மத்திய அரசு கொடுக்க வேண்டிய பணத்தை தரவில்லை. இருந்தாலும் புதுச்சேரியில் சிறப்பான ஆட்சியை தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசையும், இங்கு இருப்பவர்களையும் எதிர்த்து போராடி மக்கள் நல திட்டங்களை செய்து வருகிறோம்.
காங்கிரஸ் ஆட்சியில் ரூ.345க்கு கொடுக்கப்பட்ட சிலிண்டர் தற்போது ரூ.700க்கு விற்கப்படுகிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 140 டாலராக இருந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.65க்கும், டீசல் ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 45 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது, ஆனால் பெட்ரோல் ரூ.80க்கும், டீசல் ரூ.75க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பா.ஜ.க. மக்களை சுரண்டும் வேலை பார்த்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.