பாளையங்கோட்டையில் கப்பல் ஊழியர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை
பாளையங்கோட்டையில் கப்பல் ஊழியர் வீட்டில் கதவை உடைத்து 15 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
நெல்லை,
பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் காமாட்சி அம்மன் நகர் 5–வது தெருவை சேர்ந்தவர் அண்டன் (வயது 47). இவர் துபாயில் உள்ள ஒரு தனியார் கப்பல் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகந்தி, தனது மகன்களுடன் ஆழ்வார்திருநகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டுக்கு வந்த சுகந்தி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன.
பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.38 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. சுகந்தி தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டு கதவை உடைத்து நகை–பணத்தை கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சுகந்தி, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே நெல்லை மாநகர குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் வரதராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நகை–பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
நெல்லையில் கடந்த ஒரு மாதமாக தினமும் நகைபறிப்பு, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த திருட்டை தடுக்க அமைக்கப்பட்ட 3 தனிப்படை போலீசாரும் நேற்று பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இரவில் நடத்திய வாகன சோதனையில் சந்தேகப்படும்படியாக வந்த 13 பேரை போலீசார் பிடித்து அவர்களுடைய கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.