ஆவடி அருகே பட்டப்பகலில் பயங்கரம் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை
ஆவடி அருகே பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
ஆவடி,
சென்னை ஆவடியை அடுத்த கொல்லுமேடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நிஷா ராஜன்(வயது 33). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி மோகனபிரியா(28) இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு அஞ்சனா(7) என்ற மகளும் தஷ்வந்த்(5) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று காலை மகளும், மகனும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர். நிஷா ராஜன் வெளியே சென்றார். மோகனபிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பகல் 12.30 மணிக்கு வெளியே சென்றிருந்த கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது முன்பக்க கதவு சாத்தப்பட்டு உட்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.
இதனால் நிஷா ராஜன் கதவைத் தட்டி மனைவியை கூப்பிட்டார். கதவு திறக்கப்படாததால் அவர் பின்பக்கமாக சென்றார். அங்கு பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அங்கு சமையலறை அருகே வராண்டாவில் அவரது மனைவி மோகனபிரியா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகை காணவில்லை. அதிர்ச்சியடைந்த நிஷா ராஜன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியை பார்த்து கதறி அழுதார். அதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் நந்தகுமார், ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ஜான்சி வரவழைக்கப்பட்டு அது சம்பவ இடத்திலிருந்து செங்குன்றம் சாலையில் சுமார் 1 கி.மீ. ஓடி சமாதி குளம் என்ற இடம் வரை சென்று நின்று விட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும், தடய அறிவியல் துறையை சேர்ந்தவர்களும் கொலை நடந்த இடத்துக்கு வந்து கொலையாளிகளின் கைரேகையை பதிவு செய்தனர்.
இந்த கொலை பற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்கு பதிவு செய்து மோகனபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் நந்தகுமார் தலைமையில் 2 தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.