ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அர்ஜூனா உள்பட 15 யானைகளுக்கு வழியனுப்பு விழா
மைசூரு தசரா விழாவில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அர்ஜூனா உள்பட 15 யானைகளுக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது. முன்னதாக யானைகளுக்கு அரண்மனை நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
மைசூரு,
மைசூருவில் உலகப்புகழ் பெற்ற தசரா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை காண கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மைசூருவுக்கு வருகை தருவார்கள். அதுபோல இந்த ஆண்டுக்கான தசரா விழா கடந்த மாதம்(செப்டம்பர்) 21–ந் தேதி தொடங்கி 30–ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது.
கடந்த மாதம் 21–ந் தேதி மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீசுவரி அம்மனுக்கு கன்னட கவிஞர் நிசார் அகமது சிறப்பு பூஜைகள் செய்து முதல்–மந்திரி சித்தராமையா முன்னிலையில் தசரா விழாவை தொடங்கி வைத்தார். அன்று முதல் தினமும் இளைஞர் தசரா, விவசாய தசரா, மகளிர் தசரா, மலர்க் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் கடந்த மாதம் 30–ந் தேதி நடந்தது. இந்த ஊர்வலத்தில் சாமுண்டீசுவரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்தபடி அர்ஜூனா யானை செல்ல மற்ற 14 யானைகளும் பின்தொடர்ந்து சென்றன. அத்துடன் அலங்கார வண்டிகளின் அணிவகுப்புகளும் நடந்தன.
தசரா ஊர்வலத்தில் கலந்து கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பே கே.குடி, நாகரஒலே, மத்திகோடு, உள்ளிட்ட யானைகள் முகாம்களில் இருந்து அர்ஜூனா, பலராமா, அபிமன்யு, கஜேந்திரா, கோபாலசாமி, விக்ரமா, கோபி, ஹர்ஷா, கிருஷ்ணா, துரோணா, பீமா, விஜயா, காவேரி, வரலட்சுமி, பிரசாந்த் ஆகிய 15 யானைகள் 2 கட்டமாக மைசூருவுக்கு வந்தன.
அந்த 15 யானைகள், அவற்றின் பாகன்கள் மற்றும் குடும்பத்தினர் மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் 15 யானைகளுக்கும் தினமும் நடைபயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 30–ந் தேதி ஜம்பு சவாரி ஊர்வலம் முடிந்ததும் கடந்த 1, 2–ந் தேதிகளில் யானைகள் அரண்மனை வளாகத்தில் ஓய்வு எடுத்தன. இந்த நிலையில் நேற்று யானைகளை முகாம்களுக்கு அனுப்பி வைப்பதற்காக மைசூரு அரண்மனை முன்பு யானைகளுக்கு வழியனுப்பு விழா நடந்தது.
இந்த விழாவில் மைசூரு மாவட்ட கலெக்டர் ரன்தீப், சோமசேகர் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது 15 யானைகளும் வரிசையாக அணிவகுத்து நின்றன.
யானைகளுக்கு அரண்மனை நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து யானைகளின் பாகன்களுக்கு கவுர பணமாக தலா ரூ.7,500–ஐ கலெக்டர் ரன்தீப் வழங்கினார். இதையடுத்து பாகன்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அரண்மனை வளாகத்தில் சுவையான சிற்றுண்டி பரிமாற்றப்பட்டது.
இதையடுத்து 15 யானைகளும் காலை 10 மணியில் இருந்து 11.30 மணி வரை 15 லாரிகளில் ஏற்றப்பட்டன. அப்போது வழியனுப்பு விழாவில் கலந்து கொள்ள பொதுமக்கள் யானைகளின் முன்பு நின்று செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டனர். இதனை தொடர்ந்து 12 மணியளவில் லாரிகள் புறப்பட்டன. கலெக்டர் ரன்தீப் யானைகளை வழியனுப்பி வைத்தார். இதையடுத்து தசரா யானைகள் அங்கிருந்து பிரியா விடைபெற்று சென்றன. வழியனுப்பு விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு யானைகளை வழியனுப்பி வைத்தனர்.