கர்நாடகத்தின் நிதி நிலையை காங்கிரஸ் அரசு சீர்குலைத்துவிட்டது எடியூரப்பா குற்றச்சாட்டு


கர்நாடகத்தின் நிதி நிலையை காங்கிரஸ் அரசு சீர்குலைத்துவிட்டது எடியூரப்பா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Oct 2017 5:00 AM IST (Updated: 4 Oct 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக பா.ஜனதா ஆதிதிராவிடர் அணியின் செயற்குழு கூட்டம் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

பெங்களூரு,

இந்த கூட்டத்தை அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தொடங்கி வைத்து பேசியதாவது:–

கவுரி லங்கேஷ் கொலை பெங்களூருவில் நடந்துள்ளது. இந்த கொலை குறித்து சி.பி.ஐ. அமைப்பு விசாரிக்க மறுத்தால், அப்போது நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடியை அல்லது பா.ஜனதாவை குறை கூறலாம். அந்த கொலையை நாங்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டோம். ஆனால் இந்த வி‌ஷயத்தில் பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை பிரகாஷ்ராஜ் தரக்குறைவாக பேசியுள்ளார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பிரகாஷ்ராஜ் இவ்வாறு பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

காங்கிரஸ் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான கட்சி. வறுமையை ஒழிப்பதாக காங்கிரஸ் சொன்னது. ஆனால் ஏழை மக்களிடம் குடிகொண்டுள்ள வறுமையை அந்த கட்சி ஒழிக்கவில்லை. ஆனால் ஆதிதிராவிடர்களின் பெயரை கூறி காங்கிரஸ் பணக்கார கட்சியாக மாறிவிட்டது. காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கருக்கு அவமானத்தை ஏற்படுத்தினர். பாபுஜெகஜீவன்ராம் பிரதமர் பதவியில் அமருவதை அந்த கட்சி தான் தடுத்தது. அதனால் அம்பேத்கர் பற்றி பேச காங்கிரசுக்கு தகுதி இல்லை.

ஆதிதிராவிட மக்கள் நலனுக்காக பா.ஜனதா மட்டுமே பாடுபட்டு வருகிறது. கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்களுக்காக 36 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகள் உள்பட ஆதிதிராவிட மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களின் பயன் கிடைக்க நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது ஆதிதிராவிடர்களின் வளர்ச்சிக்காக அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் இப்போது உள்ள காங்கிரஸ் அரசு அந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 40 சதவீதத்தை கூட செலவு செய்யவில்லை. கர்நாடகத்தின் நிதி நிலையை காங்கிரஸ் அரசு சீர்குலைத்துவிட்டது. பெங்களூரு வளர்ச்சி ஆணையத்துக்கு சொந்தமான வீடுகள் மற்றும் வீட்டுமனைகளை விற்று இந்த அரசு ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறது.

அடுத்த மாதம்(நவம்பர்) மாதம் 2–ந் தேதி முதல் கர்நாடகத்தில் ‘பரிவர்த்தனா‘ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கட்சி தொண்டர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில ஆதிதிராவிடர் அணி தலைவர் வீரய்யா, முன்னாள் மந்திரி கோவிந்த கார்ஜோள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story