போலீஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்தவர்: அனுபமா செனாய் தனிக்கட்சி முகநூலில் கருத்து பதிவு
முன்னாள் மந்திரியுடன் ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்த அனுபமா செனாய் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக முகநூலில் பதிவு செய்து உள்ளார்.
பெங்களூரு,
பல்லாரி மாவட்டம் கூட்லகியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் அனுபமா செனாய். இவர் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கும் முதல்–மந்திரி சித்தராமையாவின் மந்திரிசபையில் தொழிலாளர்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த பரமேஸ்வர் நாயக்கிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதாவது பரமேஸ்வர் நாயக், அனுபமா செனாயை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் செல்போனை எடுத்து பேசவில்லை என்றும், அதனால் அனுபமா செனாயை, பரமேஸ்வர் நாயக் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பரமேஸ்வர் நாயக்கின் உறவினர்கள் சிலர் கூட்லகியில் சட்டவிரோதமாக நடத்தி வந்த மதுபான கடையை மூட அனுபமா செனாய் நடவடிக்கை எடுத்ததாகவும், இதற்கு பரமேஸ்வர் நாயக் எதிர்ப்பு தெரிவித்து, அனுபமா செனாய்க்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டது. இதனால் பரமேஸ்வர் நாயக், தன்னை மிரட்டுவதாக அனுபமா செனாய் குற்றச்சாட்டினார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் பரமேஸ்வர் நாயக் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அனுபமா செனாய் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அப்போதைய கர்நாடக மாநில டி.ஜி.பி.யாக இருந்த ஓம்பிரகாசிடம் கடிதத்தை கொடுத்தார். அதன்பின் அவருடைய ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பதவியை ராஜினாமா செய்த அனுபமா செனாய்க்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்தனர். மேலும் அவர் தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்று அவரிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் உடுப்பியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த முதல்–மந்திரி சித்தராமையாவிடம், அனுபமா செனாய் தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவரின் ராஜினாமா கடிதம் திரும்ப பெறவில்லை. இந்த நிலையில் அனுபமா செனாய் தனது முகநூலில்(பேஸ்புக்கில்) ஒரு கருத்தை பதிவு செய்து உள்ளார். அதில் நான் தனிக்கட்சி தொடங்க உள்ளேன் என்றும், கட்சி தொடங்குவதற்காக பணிகளை தொடங்கி விட்டதாகவும் பதிவு செய்து உள்ளார்.
மேலும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், பெண்கள் உரிமைகளை பாதுகாப்பதும் தான் நான் தொடங்கும் கட்சியின் நோக்கமாக இருக்கும். மேலும் நான் தொடங்கும் கட்சி அரசு ஊழியர்களும், பொதுமக்களுக்கும் இடையே பாலமாக இருக்கும்.
நான் கட்சி தொடங்குவது குறித்து நண்பர்கள், எனக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், குடும்பத்தினரிடம் பேசி உள்ளேன். அவர்கள் நான் தனிக்கட்சி தொடங்க எனக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து ஆலோசனை கேட்டு அதன்படி முடிவு எடுப்பேன். இவ்வாறு அவர் முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிடப்பட்டு இருந்தது.