15 லட்சத்து 13 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளனர்: குமரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


15 லட்சத்து 13 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளனர்: குமரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 4 Oct 2017 4:30 AM IST (Updated: 4 Oct 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டார். இதில் 15 லட்சத்து 12 ஆயிரத்து 841 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். பெண்களை விட ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான (2017) தொடர் திருத்தம் முடிவடைந்த நிலையில் நேற்று குமரி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சிறு கூட்ட அரங்கில் நடந்தது.

அப்போது கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி, பத்மனாபபுரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியின்போது முன்னிலை வகித்தனர். பின்னர் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி இன்று (அதாவது நேற்று) வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தகுதி வாய்ந்த புதிய மற்றும் இளம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பொருட்டு திருத்தங்கள் மேற்கொள்ளுதல் குறித்த சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் அக்டோபர் மாதம் 3-ம் தேதி (நேற்று) முதல் 31-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

வருகிற 7-ந் தேதி மற்றும் 21-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும் மற்றும் குடியிருப்பு நலசங்கங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கும், அவர்களது பெயர்களை பரிசீலனை செய்வதற்கும் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பெயர்கள் இடம் பெற்றுள்ள விபரத்தை தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இச்சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் 1-1-2018 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைவரும் அதாவது 31-12-1999-ம் ஆண்டுக்கு முன்பு பிறந்த அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய தகுதியுடையவர்களாவர். அக்டோபர் 31-ந் தேதியுடன் நிறைவுறும் இச்சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின் போது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலும், தாசில்தார் அலுவலகங்களிலும், நகராட்சி அலுவலகங்களிலும் உரிய படிவங்களைச் சமர்ப்பிக்கலாம். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.el-e-ct-i-ons.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

வருகிற 8-ந் தேதி மற்றும் 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமைகள்) ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. சிறப்பு முகாம்கள் நடைபெறும் அந்நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட்ட படிவங்களைப் பெறுவார்கள். பொதுமக்கள் அனைவரும் அவர்கள் வசிக்கின்ற வீட்டின் அருகாமையிலுள்ள வாக்குச்சாவடியில் நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்போது இறந்த வாக்காளர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் பணியும் நடைபெறவுள்ளது. இறந்த மற்றும் இடம் பெயர்ந்த, இருமுறை ஒரே தொகுதியில் இடம்பெற்ற நபர்களின் பெயர்களை படிவம்-7ல் விண்ணப்பித்து பெயர் நீக்கம் செய்யப்படவேண்டும். இறப்பு பதிவு செய்யப்பட்ட விவரங்கள், உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டு அதனடிப்படையிலும் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியல்களிலிருந்து சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின் போது நீக்கம் செய்யப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர், புகைப்படம், முகவரி, பிறந்தநாள் ஆகிய விபரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் படிவம்-8-ல் விண்ணப்பம் செய்யப்படவேண்டும். வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்கள் ஒரே தொகுதியில் ஒரு பாகத்திலிருந்து வேறுபாகத்திற்கு குடிபெயர்ந்தால் புதிய முகவரியை மாற்றம் செய்ய படிவம்- 8ஏ-ல் விண்ணப்பம் செய்யப்படவேண்டும். அயல்நாடு வாழ் இந்தியர்கள் அவர்களது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்டு) நகலுடன் படிவம்- 6ஏ-ல் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஒரு தொகுதியிலிருந்து வேறொரு தொகுதிக்கு வாக்காளரது பெயரை மாற்றம் செய்ய இயலாது. ஏற்கனவே இடம் பெற்றிருந்த தொகுதியிலுள்ள ஒரு வாக்காளர், வேறு தொகுதிக்கு குடி பெயர்ந்திருந்தால் அத்தகைய இருப்பிட ஆதாரத்துடன் படிவம்-6ல் விண்ணப்பம் செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே இடம் பெற்றிருந்த பெயரினை படிவம்-7-ல் விண்ணப்பித்து நீக்கம் செய்துகொள்ளவேண்டும்.

18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட புதிய வாக்காளர்கள் அவர்களது வயது குறித்த ஆதாரத்தினை (மதிப்பெண் பட்டியல், பிறப்புச்சான்று, மாற்றுச்சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்று) படிவம்-6 விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டும். 25 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் போது, படிவம்-6 விண்ணப்பத்துடன் முன்பு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விபரங்களை பாகம்- 4-ல் கண்டிப்பாக நிரப்பப்பட வேண்டும். குமரி மாவட்டத்திற்கு கடந்த ஜனவரி 1-ம் நாளை தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் வாக்காளர்பட்டியல் (துணைப்பட்டியல்-1) 5-1-2017 அன்று வெளியிடப்பட்டது. இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 52 ஆயிரத்து 574 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 51 ஆயிரத்து 548 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 124 பேரும் என மொத்தம் 15 லட்சத்து 4 ஆயிரத்து 246 வாக்காளர்கள் இருந்தனர். தொடர் திருத்தம் மற்றும் புதிய இளம் வாக்காளர்களுக்கான சிறப்பு பணிக்குப்பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 56 ஆயிரத்து 980 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 55 ஆயிரத்து 710 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 151 பேரும் ஆக மொத்தம் 15 லட்சத்து 12 ஆயிரத்து 841 பேர் இடம் பெற்றுள்ளனர்.

1-1-2018 அன்று 18 வயது பூர்த்தி செய்யும் நபர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட மையங்களில் தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுடைய அனைத்து நபர்களும் விடுதலின்றி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்து வாக்குரிமையினை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, தாசில்தார்கள் அருளரசு (அகஸ்தீஸ்வரம்), சாரதாமணி (தோவாளை), இக்னேஷியஸ் சேவியர் (கல்குளம்), ரெத்தினம் (விளவங்கோடு), தேர்தல் தனி தாசில்தார் சுப்பிரமணியன், சந்திரன் (அ.தி.மு.க.), மணி சுவாமிகள் (பா.ஜனதா), கண்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வக்கீல் ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்), வக்கீல் லீனஸ்ராஜ் (தி.மு.க.), செல்வம் (தேசியவாத காங்கிரஸ் கட்சி) உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story