புதுச்சேரியில் வாலிபர் வெட்டிக்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
புதுவையில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி,
புதுவை வாணரப்பேட்டை சின்னாத்தா கோவில் வீதியை சேர்ந்தவர் வேலு என்ற முனிவேலு (வயது 32). இவர் மீது திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கணவன்–மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் கணவனை பிரிந்த சங்கீதா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
வேலு தனது தாயார் செந்தாமரையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் செந்தாமரை திருநள்ளாறு சென்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
அவர் ஆட்டுப்பட்டு சாராயக்கடை அருகே மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சிலருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவரை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் கழுத்து மற்றும் கால் பகுதியில் கத்தியால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
அவர்களிடமிருந்து தப்பி வந்த வேலு அந்தோணியார் கோவில் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்துள்ளார். பஸ் நிறுத்தத்திலேயே மயங்கி விழுந்த அவர் பரிதாபமாக செத்தார்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்–இன்ஸ்பெக்டர் நியூட்டன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சனும் வந்து விசாரணை நடத்தினார். தற்போது போலீஸ் பிடியில் சிலர் சிக்கியுள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.