லிங்காரெட்டிப்பாளையத்தில் மதுபான கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது
லிங்காரெட்டிப்பாளையம் அரசு மதுபான கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனூர்,
புதுவை மாநிலம் காட்டேரிக்குப்பம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்டது லிங்காரெட்டிப்பாளையம். இங்கு மாநில அரசின் சார்பு நிறுவனமான பாசிக் மற்றும் பாப்ஸ்கோ சார்பில் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கடந்த மாதம் மர்மநபர் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த 3,150 ரூபாயை திருடிச்சென்றான்.
இது தொடர்பாக மதுபான கடை விற்பனையாளர் வாசுதேவன் காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை லிங்காரெட்டிப்பாளையம் எல்லையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் கையில் இரும்பு கம்பியுடன் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
இதையடுத்து அவரை காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். அவர், நாமக்கல் மாவட்டம் பீமநாயக்கன்பட்டியை சேர்ந்த சிங்காரம் மகன் சக்திவேல் (வயது 34) என்பதும், இவர் லிங்காரெட்டிப்பாளையத்தில் மதுபான கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை கைது செய்து, இவருக்கு வேறு ஏதேனும் திருட்டு, கொள்ளையில் தொடர்பு இருக்கிறதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சக்திவேல் மீது தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 13 வழக்குகளும், புதுவை மாநில போலீஸ் நிலையங்களில் 4 திருட்டு வழக்குகளும் உள்ளன.