விருகம்பாக்கத்தில் 16–வது மாடியில் இருந்து விழுந்து சாப்ட்வேர் நிறுவன ஊழியர் மர்மச்சாவு


விருகம்பாக்கத்தில் 16–வது மாடியில் இருந்து விழுந்து சாப்ட்வேர் நிறுவன ஊழியர் மர்மச்சாவு
x
தினத்தந்தி 6 Oct 2017 4:30 AM IST (Updated: 6 Oct 2017 1:14 AM IST)
t-max-icont-min-icon

விருகம்பாக்கத்தில் 16–வது மாடியில் இருந்து விழுந்து சாப்ட்வேர் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம் அருணாச்சலம் மெயின்ரோடு பகுதியில் உள்ள 16 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் ராஜாராம் (வயது 44). கந்தன்சாவடியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி தீபா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் வந்த தீபா தனது கணவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

ராஜாராம் தங்கி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள குழாய் இணைப்புகள் வெளியே தெரியாத வகையில் கட்டிட உயரத்துக்கு சுவர் கட்டப்பட்டு உள்ளது. அதற்குள் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனால் அங்கு வசிப்பவர்கள் முதல் மாடிக்கு சென்று பார்த்தபோது ஆண் சடலம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த உடலை வெளியே எடுத்தனர். அப்போதுதான் அது ராஜாராம் உடல் என தெரியவந்தது. இதையடுத்து ராஜாராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து அவருடைய மர்மச்சாவு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:–

13–வது மாடியில் ராஜாராம் குடும்பத்துடன் வசித்து வந்தார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் இரவு நேரத்தில் 16–வது மாடியில் இருக்கும் மொட்டை மாடிக்கு சென்று செல்போனில் பேசி விட்டு கீழே வருவார். மேலும் அவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி இரவு நேரத்தில் மொட்டை மாடிக்கு செல்வார்.

மனைவியிடம் பணம் எடுத்து வருவதாக கூறி விட்டு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியிடம் கேட்டபோது ராஜாராம் சம்பவத்தன்று வெளியே வரவில்லை என கூறினார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் ராஜாராம் வெளியே செல்வது போன்ற காட்சிகள் எதும் பதிவாகவில்லை.

இவ்வாறு போலீசார் கூறினர்.

எனவே பணம் எடுக்க சென்றபோது செல்போனில் அழைப்பு வந்ததால் ராஜாராம் வழக்கம்போல் 16–வது மாடிக்கு சென்று செல்போனில் பேசியபோது கால் தவறி கீழே விழுந்து இறந்தாரா? அல்லது வேறு யாராவது அவரை தள்ளி விட்டார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் வேலை செய்யும் இடத்தில் ஏதாவது பிரச்சினை இருந்ததா? கடைசியாக யாரிடம் அவர் பேசினார்? என்பது குறித்து அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.


Next Story