ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் மண் பரிசோதனை பணிகள் தொடங்கியது
ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றின் குறுக்கே ரூ.28 கோடியில் மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
ஊத்துக்கோட்டை,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் வாகன போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்படும். இதை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் 1937–ம் ஆண்டு ஆரணி ஆற்றின் மீது 480 மீட்டர் தூரத்துக்கு தரைப்பாலம் அமைத்தனர்.
இந்த தரைப்பாலத்தை கடந்துதான் தற்போது திருவள்ளூர், பூந்தமல்லி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 2015–ம் வருடம் பெய்த பலத்த மழைக்கு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கியதால் வாகன போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்பட்டது. சுமார் 60 நாட்களுக்கு பிறகு வெள்ளம் குறைந்த பின்னர் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. அதுவரையில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால் பிரயாண தூரம் அதிகரித்தது மட்டுமின்றி பல சிரமங்களை பொதுமக்கள் எதிர்கொண்டனர்.
இதனை கருத்தில் கொண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊத்துக்கோட்டை வாழ் பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் மேம்பாலம் அமைக்க ரூ.28 கோடியை அரசு ஒதுக்கியது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி மண்ணின் தரத்தை பரிசோதனை செய்யும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. மண் பரிசோதனை பணிகளுக்கு பிறகு மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.